முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆலயத்தில் குழப்பங்கள் மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்துவதில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினர் மற்றும் தனிநபர்கள் தொடர்பான தகவல்களை திரட்டுமாறு புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவுகள் பிறபிக்கப்பட்டுள்ளன.
குருந்தூர்மலை ஆலயம் பற்றிய சர்ச்சைகள் மற்றும் சர்ச்சைகளால் உருவாக்கப்படும் இனவாதக் கலவரங்கள் குறித்து எச்சரிக்கும் வகையில் இந்திய உளவுத்துறைக்கு கசிந்துள்ள அறிக்கைகளை அடுத்தே இலங்கையின் புலனாய்வுத்துறைக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குருந்தூர்மலை ஆலய வளாகத்திற்கு உரிமை கோரும் வகையில் பௌத்தர்களையும் இந்துக்களையும் தூண்டும் அரசியல் கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்களை கண்காணிக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட இனவாதக் கலவரங்கள் மற்றும் குழப்பங்களை ஏற்படுவதற்கான வலுவான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்தியப் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
குருந்தூர்மலை விகாரை வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பௌத்த பிக்குகளும், பக்தர்களும் மத வழிபாடுகளை நடத்துவதற்காக வரத் தொடங்கியுள்ளனர்.
இதனால் இங்கு பௌத்தர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே பதற்றம் நிலவி வருவதால், மத பக்தர்களிடையே மோதல் ஏற்படாமல் தடுக்க ஏராளமான பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பு கடையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த பௌத்த பிக்குகள் குருந்தூர்மலை விகாரையில் சமய நிகழ்வுகளை நடாத்தியதால் அதனை ஒட்டிய இந்து ஆலயத்தில் பொங்கல் விழாவை நடத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டிருந்தன. என்றாலும் சிறியடி சலசலப்புடன் இந்துக்களால் இங்கு பொங்கல் வைக்கப்பட்மையும் குறிப்பிடத்தக்கது.