பாராளுமன்றத்தில் முட்டிமோதிய மலையக எம்.பிகள்

0
85
Article Top Ad
மாத்தளை, எல்கடுவ, ரத்வத்தை தோட்டத்தில் கனகராஜ் என்பவரின் தற்காலிக வீடு உடைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் ஆளும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது.
சபை அமர்வுகள் ஆரம்பமான மறுகணமே எதிர்க்கட்சியில் இருக்கும் மலையக எம்.பிகள் ரத்வத்தை தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட உதவி தோட்ட முகாமையாளர் உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோஷங்களை எழுப்பியவாறு இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உடனடியாக உதவி முகாமையாளர் கைதுசெய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியதுடன், சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் இடம்பெற வேண்டும் எனவும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தார்.
எதிர்க்கட்சித் தலைவருக்கு பதிலளித்த பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன, சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளுக்கு பணிக்கப்பட்டுள்ளதுடன், உதவி முகாமையாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்நிலையில், தொடர்ந்து சபையில் கருத்துகளை வெளியிட்ட மலையக எம்.பிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் உரையாற்றுகையில்,
“மாத்தளை, எல்கடுவ, ரத்வத்தை தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்தை முழு உலகமும் பார்த்தது. இது எமது மக்களுக்கு மாத்திரமல்ல முழு நாட்டுக்கும் இழுக்கை ஏற்படுத்தியுள்ளது .
இந்த தோட்டங்களை அரசாங்கம் பொருப்பேற்க வேண்டும். அமைச்சர் ஒருவர் சென்றாக கூறுகின்றனர். நானும் சென்றிருப்பேன். நான் ரஜினியோ, சிவாஜியோ அஜித்தோ அல்ல. நான் மனோகணேசன். இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் நான்.
நாம் இலங்கை மக்களுடன் வாழவே ஆசைப்படுகிறோம். அங்கு சென்று மக்களை ஆக்ரோசப்படுத்த விரும்பவில்லை. இலங்கையின் சட்டவரம்புக்குள் இந்தப் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள விரும்புகிறோம்.
எமது குடியுரிமை முழுமைப்படுத்தப்பட வேண்டும். எமக்கு எவரும் அடித்தால் திருப்பி அடிக்க வேண்டும். அதுசாரிதான்.
திருப்பி அடிக்கவில்லை என்பதால் நாம் பலம் இழந்தவர்கள் என கருதக்கூடாது. இதற்கு உரிய தீர்வை வழங்க வேண்டும்.
வெள்ளையர்களின் ஆட்சியில் இங்கு வந்து தற்போது கருப்பு வெள்ளையர்களின் ஆட்சியில் இருக்கிறோம். இலங்கையின் சட்டத்துக்குள் இதற்கு தீர்வை வழங்க முன்வாருங்கள்’’ என்றார்.
அமைச்சர் ஜீவன் தொண்டமான் உரையாற்றுகையில்,
“இந்த வீட்டின் உரிமையாளர் ஒரு தோட்டத் தொழிலாளி அல்ல. தோட்டத் தொழிலாளர்கள் அல்லாதவர்களை நாட்டின் குடிமக்களாக இவர்கள் கருதுவதில்லை.
தோட்டப்பகுதியில் இரண்டு இலட்சம் மக்கள் தொழிலாளர்களாக உள்ளதுடன், 8 இலட்சம் பேர் தோட்டங்களில் வசிக்கின்றனர்.
தோட்டத் தொழிலாளர்கள் அல்லாதவர்கள் வீடுகள் கட்டப்படும் போது அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதில்லை.
எமது சமூகத்தின் கௌரவம் பாதிக்கப்பட்டிருந்தமையால்தான் நான் அங்கு சென்றேன். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு இந்த விடயம் தொடர்பில் உடனடியாக அறிவித்தோம். அனைத்து பிரச்சினைகளையும் நாம் அரசியல்மயப்படுத்தப்படுவதை நிறுத்த வேண்டும்.
எமது சமூகத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 1000 சம்பத்தை அரசாங்கம் வழங்க நடவடிக்கையெடுக்குமென கூறிய தருணத்தில் 1500 ரூபாவை வழங்குவதாக எதிர்க்கட்சி கூறியது. எல்லா விடயங்களில் அரசியல் செய்யக்கூடாது.
இத்தோட்டத்தில் உதவி முகாமையாளர் உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். 12 குடும்பங்களுக்கு வீடுகளை வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. எமக்கு நிலவுரிமைதான் அவசியமாக உள்ளது. அரசாங்கத்தில் சில விடயங்களை செய்வது எமக்கும் கடினமாகதான் இருக்கிறது. அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும்“ என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குறுக்கிட்டு உரையாற்றுகையில்,
ஜீவன் தொண்டமான் அங்கு சென்றதை வரவேற்கின்றோம். ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
நீங்கள் இருக்கும் அரசாங்கத்தால் உங்களால் எதனையும் செய்ய முடியாதென சுய ஒப்புதலையும் தருக்கின்றீர்கள். அவ்வாறு இருக்கும் போது எங்களையும் உங்களுடன் வந்து அமரச்சொல்கின்றீர்கள்.
அங்கே முடியாது என்றால், எதிர்க்கட்சிக்கு வாருங்கள். சேர்ந்து செய்வோம். இப்போதாவது கைதுசெய்ய நடவடிக்கையெடுங்கள்“ என்றார்.
இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் கருத்து வெளியிடுகையில்,
அமைச்சருக்கு தோட்டத்துக்கு செல்ல வேண்டும் என்றால், தோட்ட முகாமையாளரின் அனுமதி அவசியம். எமக்கு இணக்கப்பாடுக்கு வருவதல்ல அவசியம். சம்மந்தப்பட்டவர் உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டும்.
நீதிமன்றத்தின் அனுமதியின்றி வீடுகளை உடைக்க முடியாது. இடமாற்றம் செய்வது அல்ல எமக்கு அவசியம். அவர் உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டும்“ என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, 13ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் நாட்டில் இனவாதத்தை தூண்ட பார்க்கின்றனர்.
மாத்தளை மாவட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு வாக்குகள் இல்லை. அதனை பெற்றுக்கொள்ளவே இவ்வாறு மக்கள் முன்சென்று நடிக்கின்றனர்.“ எனக் குற்றம்சாட்டினார்.
வாக்குவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்த சபாநாயகர், தென் மாகாணத்திலும் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளன. அவை குறித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.