இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவிக்கின்றனர் – ICRC

0
77
Article Top Ad

காணாமல் போனவர்கள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதன் காரணமாக இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவித்து வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர், ஏனைய வன்முறை சூழ்நிலைகள், பேரழிவுகள், மனிதாபிமான அவசர நிலைகள் மற்றும் இடம்பெயர்வு போன்றவற்றினால் உலகளாவிய ரீதியில் ஆயிரக்கணவர்கள் காணாமல் போயுள்ளதாக அல்லது தமது குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா அல்லது இறந்துவிட்டார்களா என்பது தொடர்பில் தெளிவற்ற நிலையில் வாழும் குடும்பங்களுக்கு வேதனையும் நிச்சயமற்ற தன்மையும் ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளது.

காணாமல் போனவர்களின் குடும்பங்கள், அவர்களின் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வது மிகவும் அவசியமானது என வலியுறுத்தியுள்ளது.

பெரும்பாலும் காணாமல் போனவர்கள் குடும்பத்தை ஆதரிப்பவராக இருக்கின்ற நிலையில், அவர்கள் இல்லாதது குடும்பங்களின் பொருளாதார, சட்ட மற்றும் நிர்வாக சவால்களை அதிகரிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அறிய மக்களுக்கு உரிமை உண்டு எனவும், காணாமல் போனவர்களின் நிலை மற்றும் இருப்பிடம் குறித்து கண்டறியும் முயற்சிகளுக்கு தகவல்கள் மற்றும் உதவிகளை வழங்குவதற்கு அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர் எனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.