இந்திய தலைநகர் புதுடெல்லியின் எதிர்வரும் 9, 10ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லையென அறிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இம்மாத இறுதியில் வடகொரியாவுடன் ஆயுத ஒப்பந்தத்மொன்றில் கைச்சாத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இம்மாத இறுதியில் ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இதன்போதே குறித்த ஆயுத ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ளும் கிம் ஜாங் உன், ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்தித்து உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பில் செய்தி வெளியிடடுள்ள நியூயோர்க் டைம்ஸ்,
ஆயுதம் தாங்கிய வீரர்கள் பாதுகாப்புடன் கிம் ஜாங் உன், ரஷ்யாவுக்கு ரயிலில் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், இரு நாட்டு தலைவர்கள் எந்த இடத்தில் சந்தித்து பேசுவார்கள் என்று தெளிவான விவரம் கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளது.
ஆனால், பசிபிக் துறைமுக நகரமான விளாடிவோ ஸ்டாக்கில் இந்த சந்திப்பு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் நியூயோர்க் டைம்ஸ் கூறுகிறது.
இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பேரவையின் செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறும்போது, கடந்த மாதம் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு வடகொரியாவுக்கு பயணம் செய்தார். அப்போது ரஷ்யாவுக்கு பீரங்கி வெடி மருந்துகளை விற்க வட கொரியாவை வலியுறுத்தினார்.
இந்த ஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தையை தலைவர்கள் அளவில் தொடர கிம் ஜாங் உன் எதிர்பார்க்கிறார். அதன் காரணமாகவே கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்கு செல்வதாக தவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்கவோ கூடாது என்று வடகொரியா அளித்த பொது உறுதிமொழிகளுக்கு கட்டுபட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது.
ரஷ்யா-வடகொரியா இடையே ஆயுத பேச்சுவார்த்தைகள் தீவிரமாக முன்னேறி வருவதாக வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு அதிகாரி ஜான் செர்பி கூறியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இந்நிலையில், ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீன ஜனாதிபதி சி ஜின் பின் ஆகியோர் தவிர்த்துள்ளனர்.
அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான கடுமையான கருத்து முரண்பாடுகள் காரணமாக புடின் இந்த சந்திப்பை தவிர்த்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறாக பின்புலத்தில் அமெரிக்காவை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் ரஷ்யா, வடகொரியாவுடன் ஆயுத ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடவுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதை பல நாடுகள் எதிர்த்துள்ளதுடன், ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் போது சர்வதேச ரீதியான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்துள்ளன.