இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படமான முரளி 800 திரைப்படத்தின் முன்னோட்டம் (Trailer) வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ‘800’ படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.
எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கிய இத்திரைப்படத்தில் மதுர் மிட்டல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மகிமா நம்பியார், நரேன், நாசர் மற்றும் வேல ராமமூர்த்தி, ரித்விகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் முன்னோட்டம் இன்று மும்பையில் வெளியிடப்பட்டது.
தமிழில் எடுக்கப்பட்ட ‘800’ திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.
முரளிதரன் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் அவரது பின்னணி மற்றும் நாட்டின் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் கிரிக்கெட் வீரராக எப்படி முன்னேறினார் என்பதை முன்னோட்டம் காட்டிநிற்கிறது.
மூன்று நிமிடங்கள் நீடிக்கும் இந்த முன்னோட்டம், தமிழ் சமூகத்துடனான முரளியின் தொடர்பையும் படம் மையப்படுத்துகிறது.
உள்நாட்டுப் போர் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் அவர் இலங்கையில் பிறந்ததால், ஒரு தேசிய வீரராக அவர் எதிர்கொண்ட பின்னணி மற்றும் டெஸ்ட் போட்டி உட்பட ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் தன்னை நிரூபிக்க எதிர்கொண்ட இன்னல்களை படம் முக்கியமாக மையப்படுத்துகிறது.
முரளிதரன் தனது டெஸ்ட் வாழ்க்கையை ஜூலை 22, 2010 அன்று இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 800வது விக்கெட்டுடன் முடித்துக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.