2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த விசாரணையானது சர்வதேச விசாரணையாக இருக்கும் எனவும் உள்நாட்டு விசாரணையாக இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் வருடாந்த மாநாட்டுக்கு முன்னதாக புலம்பெயர் குழுக்கள் இலங்கைக்கு எதிராக இவ்வாறான சர்ச்சைக்குரிய காணொளிகளை வெளியிடுவதைக் காணக்கூடியதாக இருப்பதாகவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ‘செனல் 4’ வெளியிட்ட காணொளி தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செனல் 4 ஊடகமானது ‘புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவான’ நிறுவனம் என குற்றஞ்சாட்டியதுடன், செனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, புதிய ஊழல் ஒழிப்பு சட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போது நடைமுறையில் உள்ள ஊழல் ஒழிப்புச் சட்டம் அரசதுறை மற்றும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், புதிய சட்டத்தின் மூலம் தனியார் துறையிலும் ஊழல் விசாரணை நடத்தப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தவறான தீர்மானத்தை வழங்கியிருந்தாலோ அல்லது பல்வேறு காரணங்களுக்காக வழக்குகளை மீள பெற்றிருந்தாலோ அதனை விசாரிப்பதற்கான முழு அதிகாரம் புதிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உண்டு எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.