நியூயோர்க்கை சென்றடைந்த ஜனாதிபதி : ஐ.நா. பொதுச் சபையின் உறையாற்றுகிறார்!

0
61
Article Top Ad

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை நியூயோர்கை சென்றடைந்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது அமர்வில் பங்கேற்கும் வகையில் அவர் சென்றடைந்துள்ளார்.

கியூபாவில் நடைபெற்ற ஜி77 மற்றும் சீனா உச்சிமாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி அமெரிக்கா சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் நாளை முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

“2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, செழிப்பு, முன்னேற்றம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் நிறுவுதல்” என்ற கருப்பொருளின் கீழ் இந்த கூட்டத்தொடர் இடம்பெறுகிறது.

இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 21ஆம் திகதி அமர்வில் தமது விசேட உரையை ஆற்றவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருக்கு இணையாக நாளையத்தினம் நடைபெறவுள்ள, 2030 ஆம் ஆண்டிற்கான மாற்றம் மற்றும் விரைவான நடவடிக்கைகள் என்பவற்றுக்காக உலக தலைவர்களினால் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் 2023 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் உச்சி மாநாட்டின் அரச தலைவர்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அன்றையதினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பல அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதுடன், கடல்சார் நாடுகளுக்கான ஆசிய-பசுபிக் தீவு நாடுகள் கலந்துரையாடலிலும் கலந்துகொள்ள உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.