திலீபனின் நினைவேந்தலுக்கு தடைவிதிக்க கோரிய யாழ். பொலிஸாரின் மனு ஒத்திவைப்பு

0
76
Article Top Ad

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாண பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை யாழ்.நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று முன்தினம்(18) நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆறு பேரின் பெயர்கள் பிரதிவாதிகளாக குறிக்கப்பட்டு பொலிஸார் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.

தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரான திலீபன் என்பவரை நினைவுகூறும் செயற்பாடு இலங்கை சோசலிச குடியரசின் வர்த்தமானி 1721/2ஐயும், 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான தேசிய ஒருமைப்பாடுகள் சட்டத்தையும் மீறுவதாகவும் உள்ளது என்றும், நடத்தப்படும் பேரணியை 1979 ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைக்கோவைச் சட்டத்தின் கீழ் தடை செய்ய வேண்டும் என்றும் பொலிஸார் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் இடம்பெற்றது.

இதன்போது இவ் வழக்கை ஒத்திவைப்பதாக நீதவான் அறிவித்தார்.

1987 செப்டெம்பர் 26 ஆம் திகதி தனது சமூகத்தின் கோரிக்கைகளை முன்னிறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த திலீபன் எனும் இராசையா பார்த்திபனை நினைவுகூரும் வகையிலான வாகன பேரணி கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமானது.

இந்நிலையில் திருகோணமலையில் தியாகதீபம் திலீபனின் ஊர்தியை வழிமறித்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குழுவினர் கடந்த 17 ஆம் திகதியன்று தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதனையடுத்து கொழும்பின் பல பகுதிகளில் நேற்றைய தினம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த திலீபனுக்காக நினைவேந்தல்களை தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

இருப்பினும், தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு தடை கோரி வவுனியா நீதிமன்றில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, வவுனியா நீதிமன்றம் நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.