சீனாவின் உளவு கப்பல் நாளை இலங்கையில் நங்கூரமிடப்படுகிறது; இந்தியா கவலை

0
78
Article Top Ad

சீனாவின் ஷின் யான் 6 என்ற உளவு கப்பல் நாளை 23ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் உளவு மற்றும் போர்க் கப்பல்களின் மூலம் 750 கி.மீ. தூரம் வரையிலான இடங்களைக் கண்காணிக்க முடியும்.

அதன்படி இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் இந்தியாவின் தென் மாநிலங்களில் அமைந்திருக்கும் 6 கடற்படைத் தளங்களை இந்தக் கப்பல் மூலம் உளவு பார்க்க வாய்ப்பு உள்ளது. இதனால், சீன கப்பல்களின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

இலங்கைக்கு அதிக கடன் வழங்கியுள்ள நாடாக சீனா உள்ளது. அது போல இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இந்தியா 3.5 பில்லியன் டாலர் கடனை வழங்கி உள்ளதுடன் எரிபொருள், மருந்துகள், அரிசி, பால் பவுடர் மற்றும் உணவுப் பொருட்களையும் கொடுத்து உதவியுள்ளது.

எனினும், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அடுத்தடுத்து சீன உளவு கப்பல்களுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கி வருகிறது. ஏற்கனவே இலங்கைக்கு 2 நாட்கள் பயணம் மேற்கொள்ள இருந்த இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கடைசி நேரத்தில் அதனை ரத்து செய்திருந்தார்.

சீன உளவு கப்பலுக்கான அனுமதியை இலங்கை வழங்கினால் பதட்டமான நிலைமைகள் உருவாகும் என இலங்கையில் உள்ள நடுநிலையாளர்கள், இந்திய ஆய்வாளர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையின் ருகூணு பல்கலைக்கழகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, இந்த கப்பல் இலங்கைக்கு வருகிறது என்று நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீர் மாதிரிகளை எடுப்பதற்காக தமது நிறுவனம் இந்த கப்பலுடன் பணியில் ஈடுபடும் என்றும் நாரா நிறுவனம் தெரிவித்திருந்தது. எனினும் இதுவரை இந்த கப்பல் வருவதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்று ருகூணு பல்கலைக்கழகத்தின் கடல்சார் தொழில்நுட்ப துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த உளவு கப்பல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி இலங்கைக்கு வந்ததோடு, 10 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த சில வருடங்களாக இலங்கைக்கு வருகை தந்து உள்ள கப்பல்களில் பெரும்பாலானவை சீனாவை சேர்ந்த ஆய்வுக் கப்பல்களாகவே உள்ளன.

ஆசியாவை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் தனது எதிர்காலத் திட்டத்திற்கு இந்தியா தான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதும் சீனா, இந்தியாவைச் சுற்றிலும் தனது பாதுகாப்பு நிலைகளை ஏற்படுத்தி, ராணுவ ரீதியாக முடக்குவதற்கு திட்டமிட்டு வருகிறது.

அதற்காகவே ஒன்றன் பின் ஒன்றாக உளவுக்கப் பல்களை அனுப்பி இந்தியாவை உளவு பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

சீனக் கப்பலின் இலங்கை வருகை என்பது ஐக்கிய நாடுகள் கடல் சட்ட உடன் படிக்கையை மீறிய செயல் ஆகும். சீனக் கப்பலை இலங்கை அனுமதிப்பது 1987ஆம் ஆண்டு இந்திய, இலங்கை அமைதி உடன்பாட்டிற்கு எதிரான செயலாகும்.

சீனக் கப்பலை அனுமதிப்பது இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால் அதை இலங்கை அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று இந்தியா தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே சீன உளவு கப்பல்கள் நுழைவதையும், அது எந்தவிதமான பணிகளில் ஈடுபடுகிறது என்பதையும் இந்தியா ஓமன், மொரீஷியஸ் உதவியுடன் கண்காணிக்க உள்ளது.

ஓமனில் உள்ள துறைமுகத்தில் இந்தியக் கப்பல்களைப் பராமரிக்கவும், பழுதுபார்க்கவும், மாற்றியமைக்கவும், இந்தியக் கடற்படைக் கப்பல்களுக்குத் தங்கும் இடம், எரிபொருள் மற்றும் ஓய்வு வசதிகளை வழங்குவதற்கும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல இந்தியாவின் நட்பு நாடான மொரீஷியசின் போர்ட் லூயிசுக்கு வடக்கே சுமார் 1,050 கி.மீ தொலைவில் உள்ள வடக்கு அகலேகா தீவுகளில், கடல்சார் பாதுகாப்பை வழங்குவதோடு, அதன் சுற்றுலா இடங்களைப் பாதுகாக்கவும் ஒரு விமான ஓடுதளத்தை உருவாக்கியுள்ளது.

அதே வேளை இந்திய கடற்படை ஏற்கனவே குறைந்தபட்சம் 50 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை அனுப்புவதற்கான திட்டங்களைத் தயாரித்து வருகிறது.

இந்திய ஆயுதப்படைகளில் போர்க்கப்பல்கள் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானங்களைக் கையாள்வது முக்கிய அம்சமாகும்.

இந்த ஆண்டில் மட்டும் இந்தியப் பெருங்கடலில் 24 சீனக் கப்பல்கள் நுழைய திட்டமிட்டு உள்ளன. சீனக் கப்பல்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 2019ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 29 ஆக இருந்தது. அது 2022இல் 43 ஆக அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.