நாசாவின் ‘ஒசைரஸ் ரெக்ஸ்’ விண்கலம் ‘பென்னு’ சிறுகோளின் மண் மாதிரியை பூமிக்கு அனுப்பவுள்ளது

0
75
Article Top Ad

நாசாவின் ‘ஒசைரஸ் ரெக்ஸ்’ விண்கலம் ‘பென்னு’ சிறுகோளின் மண் மாதிரியை பூமிக்கு அனுப்பவுள்ளது.

‘பென்னு’ என்ற சிறுகோளில் இருந்து 250 கிராம் மண் எடுக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் வெகுதொலைவில் மிதக்கும் ‘பென்னு’ எனும் சிறுகோள் பகுதிக்கு சென்ற அமெரிக்க நாசாவின் ‘ஒசைரஸ் ரெக்ஸ்’ விண்கலம் , சிறுகோளில் இருந்து மண் மாதிரிகளை இன்று பூமிக்கு அனுப்பவுள்ளது.

‘ஒசைரிஸ் ரெக்ஸ்’ என்ற விண்கலம் கடந்த 2016ம் ஆண்டு ‘பென்னு’ என்ற சிறுகோள் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இது இரண்டு ஆண்டுகளில் சிறுகோளை நெருங்கியது.

அதன் பின்னர் மேலும் இரண்டு ஆண்டுகள் தொலைவிலிருந்து குறித்த சிறுகோளை வரைபடமாக்கியது.

கடந்த 2020ஆம் ஆண்டில் விண்கலம் ‘பென்னு’ என்ற சிறுகோளை நெருங்கி, அதைக் கடக்கத் தொடங்கியது.

குறித்த விண்கலத்தில் ஒரு ரோபோ கை உள்ளது, அது சிறுகோளின் மேற்பரப்பைக் கீறி மண்ணைச் சேகரிக்கப் பயன்படுத்தப்பட்டது. பெறப்பட்ட மண் மாதிரிகள் விண்கலத்தில் ஒரு சிறிய காப்ஸ்யூலில் சேமிக்கப்பட்டன.

இது கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி நடைபெற்றது.

மண் மாதிரி எடுக்கும் பணியை நிறைவு செய்து விட்டு , விண்கலம் மீண்டும் பூமிக்கு தனது பயணத்தை ஆரம்பித்தது.

அதிவேகமாக விண்வெளியில் பயணிக்கக்கூடிய சிறுகோள் ஒன்றை அணுகி, சிறுகோள் மீது இறங்காமல் மண் மாதிரிகள் எடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அதன்படி, இன்று பூமியின் சுற்றுவட்டப்பாதையை நெருங்கும் விண்கலம், மண் மாதிரிகள் அடங்கிய சிறிய கேப்சூலை பூமியின் சுற்றுப்பாதையில் தள்ளும்.

இது ஒரு தோட்டாவின் வேகத்தை விட 15 மடங்கு வேகமானது.

வளிமண்டலத்தினுள் நுழையும் போது குறித்த காப்ஸ்யூல் எரியும் எனவும் அதன் வெப்ப பாதுகாப்பு அமைப்பு மூலம் அது பாதுகாக்கப்படுவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

பாராசூட் உதவியுடன், கேப்சூல் அமெரிக்காவின் உட்டா பாலைவனத்தில் மெதுவாக தரையிறங்கும். காப்ஸ்யூல் வரும் வரை நாசா விஞ்ஞானிகளும், அமெரிக்க இராணுவ வீரர்களும் காத்திருப்பார்கள்.

‘பென்னு’ என்ற சிறுகோளில் இருந்து 250 கிராம் மண் எடுக்கப்பட்டுள்ளது.

பெற்றுக்கொள்ளப்பட்ட மண் மாதிரிகளை வழங்கிய பின்னர் ‘ஒசைரிஸ் ரெக்ஸ்’ மீண்டும் விண்வெளியை நோக்கி சென்று எதிர்வரும் 2029 ஆம் ஆண்டில், ‘அபோசிஸ்’ அருகே சென்று அதனையும் ஆராயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

500 மீட்டர் அகலம் கொண்ட ராட்சத ‘பென்னு’ சிறுகோள் 1999ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.