தென்சீனக்கடல் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு அவசியம்

0
72
Article Top Ad

மியன்மார், தென்சீனக்கடல், உக்ரேன் பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஐ.நா பொதுப் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தின.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த வாரம் ஐநா பொதுப் பேரவைக் கூட்டம் நடந்தது.

தென் கிழக்கு ஆசியாவிலும் உலகின் எஞ்சிய பகுதிகளிலும் அமைதி, பாதுகாப்பு, செழிப்பு தொடர வேண்டும் என்று ஆசியான் நாடுகள் குரல்கொடுத்தன.

மியன்மாரில் 2021இல் ஜனநாயக வழியில் மக்கள் தேர்ந்து எடுத்த அரசாங்கத்தை அகற்றிவிட்டு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

அதையடுத்து அந்த நாட்டில் நெருக்கடி தலைதூக்கிவிட்டது.

அதற்குத் தீர்வு காண ஐந்து அம்ச இணக்கத் திட்டத்தை ஆசியான் 2021இல் முன்வைத்தது.

அந்தத் திட்டம் அமலாக வேண்டும் என்று சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா நாடுகள் வலியுறுத்தின.

பொதுப் பேரவையில் பேசிய சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், மியன்மாரில் இராணுவம் அரங்கேற்றிய புரட்சி காரணமாக மக்களின் அமைதியும் முன்னேற்றமும் பறிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார்.

அதேபோல் தென்சீனக் கடலில் சீனாவுக்கும் தங்களுக்கும் இடையில் நிலவும் எல்லைப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு ஏற்பட வேண்டும் என்று பிலிப்பீன்ஸ், வியட்நாம் நாடுகள் ஐநாவைக் கேட்டுக்கொண்டன.

இந்த நாடுகளும் புருணை, மலேசியா ஆகிய நாடுகளும் தைவானும் தென்சீனக் கடல் பகுதியில் உரிமை கோருகின்றன. இதனால் இவற்றுக்கும் சீனாவுக்கும் இடையில் பிரச்சினை நிலவுகிறது.

இதனிடையே, சிங்கப்பூர், கம்போடியா, லாவோஸ், மலேசியா, ஆகியவற்றைச் சேர்ந்த தலைவர்கள் உக்ரேன் பிரச்சினை பற்றி பேசினார்கள்.

உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்து இருக்கிறது. இது ஐநா சாசனத்தையும் அனைத்துலக சட்டத்தையும் தொடர்ந்து மீறிவரும் ஒரு செயலாகும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

உக்ரேனில் போர் நீடிப்பதாலும் அதன் தொடர் விளைவுகளாலும் உறுப்பு நாடுகளிடையே நம்பிக்கை பாதிக்கப்படுகிறது.

பலதரப்பு ஏற்பாடுகளில் நம்பிக்கை குறைகிறது என்றும் ஐ.நா பொதுப் பேரவையில் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பேரவையில் உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கியும் சென்ற வாரம் உரையாற்றினார்.

உக்ரேனில் இருந்து ரஷ்யாவை வெளியேற்றினால் உலகம் முக்கியமான அம்சங்களில் கவனம் செலுத்தி பல சவால்களைச் சமாளிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.