தமிழ் சமூக ஆர்வலரிடம் CTID தொடர்ந்து விசாரணை

0
89
Article Top Ad

இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பை மீளக் கட்டியெழுப்ப பாடுபடுகிறீர்களா என கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் சமூக ஆர்வலர் ஒருவரிடம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நீண்டநேரமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறிப்பிட்ட காரணத்தை தெரிவிக்காமல் வியாழன் 21 ஆம் திகதி காலை 9 மணிக்கு திருகோணமலை பிராந்திய அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர், பால்ராஜ் ராஜ்குமாருக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தனர்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் (CTID) வாக்குமூலம் அளித்த பின்னர், பால்ராஜ் ராஜ்குமார் தனது பேஸ்புக் பதிவில், அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதாக, தன் மீது குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“நீண்ட நேரம் விசாரணை நடை பெற்றது. நான் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பை தொடர்ந்து ஆதரித்துத்து பேசுவதாகவும், அதை மீள் உருவாக்கம் செய்ய முனைவதாகவுமே பிரதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அத்துடன் தொடர்ந்து அரசிற்கு எதிராக கருத்து தெரிவிப்பதுடன் மக்களை ஒன்று திரட்டி அரசுக்கு எதிராக ஆர்பாட்டம் செய்ய துண்டுவதாகவும் இன்னும் பல குற்றச்சாட்டுகளை என்மீது சுமத்தினார்கள்.
அதை அரசின் முக்கிய பாதுகாப்பு பிரிவே முன் வைத்துள்ளது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ள ராஜ்குமார், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்றையாவது நிரூபிக்க முடியுமா என அவர்களிடம் கேள்வி எழுப்பியதாக பேஸ்புக்கில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“நான் அவர்களின் பல குற்றச்சாட்டுகளை மறுத்தேன், மேலும் இந்த குற்றச்சாட்டுகளில் ஏதேனும் ஒன்றை நிரூபிக்குமாறு நான் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். அவர்கள் பாதுகாப்பு அமைச்சிற்கு கோவையை அனுப்பி  அனுப்பி இது குறித்து அவர்களுக்குத் தெரிவிப்பதாக கூறினர்.”

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் காணிகள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக பால்ராஜ் ராஜ்குமார் குரல் எழுப்பி வருவதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.