“காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே” சிறுவர் தினத்தில் வன்னியில் கேள்வி

0
81
Article Top Ad

யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் உட்பட அவர்களது உறவினர்களுக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்படுதலில் மிகவும் பாதிக்கப்பட்ட முதல் மூன்று நாடுகளான எல் சல்வடோர், குவாத்தமாலா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் ஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினத்தை கொண்டாடுகையில், காணாமல் ஆக்கப்பட்டுள்ள சிறுவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

1959 ஆம் ஆண்டு சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான சாசனம் மற்றும் 30 வருடங்களுக்கு பின்னர் சிறுவர் உரிமைகளுக்கானச சாசனம் ஆகிய இரண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பர் 20ஆம் திகதி உலக சிறுவர் தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற நீதிபதி டி.சரவணராஜா பதவி விலகுவதற்கு காரணமாக அமைந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் முன்னெடுத்த போராட்டத்தின்போது, “நீதிபதியே அச்சுறுத்தப்படும் நாட்டில் எமக்கு எப்போது நீதி கிடைக்கும்?”, “தமிழ் பிள்ளைகள் பயங்கரவாதிகளா?” போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை இராணுவத்தின் அழைப்பின் பேரில், யுத்தம் முடிவடைவதற்கு முதல் நாள், சரணடைந்து காணாமல்போன 280 பேரில் எட்டு மாத குழந்தை உட்பட 10 வயதுக்குட்பட்ட 29 சிறுவர்களை மனித உரிமை அமைப்புகள் ஆவணப்படுத்தியுள்ளன.

உலகில் ஒரே நாளில் அதிகளவான சிறுவர்கள் காணாமல் போன காலம் இதுவென இலங்கையில் உள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் (ITJP) தெரிவித்துள்ளது.

2,416 நாட்களாகத் தமிழ்த் தாய்மார்கள் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல்,  சரியான ஆகாரமின்றி தொடர்ந்து வீதியில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

நீதிபதி தலைமறைவு

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு சர்வதேச விசாரணை கோரி போராட்டங்களை முன்னெடுத்த முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி  மரியசுரேஷ் ஈஸ்வரி, நீதிபதி ஒருவருக்கே உயிர் அச்சுறுத்தல் காணப்படும் நாட்டில், போராடும் தமிழ் மக்ளுக்கு எவ்வாறு நீதி கிடைக்குமென கேள்வி எழுப்பினார்.

“முல்லைத்தீவு மாவட்டத்தில் நீதி வழங்க பாடுபடும் நீதிபதி ஒருவர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவ்வாறெனின் போராடும் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் நியாயம் என்ன.?“

தனது இராஜினாமா கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள முல்லைத்தீவு மாவட்ட மற்றும் நீதவான் நீதமன்ற நீதிபதி டி.சரவணராஜா, தனக்கு ஏற்பட்டுள்ள உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.

“எனது உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் கடுமையான மன அழுத்தம் காரணமாக, மாவட்ட நீதிபதி, நீதவான் நீதிமன்ற நீதிபதி, குடும்பநல நீதிமன்ற நீதிபதி, முதன்மை நீதிமன்ற நீதிபதி, சிறு வழக்குகள் நீதிமன்ற நீதிபதி மற்றும் சிறுவர் நீதிமன்ற நீதிபதி ஆகிய பதவிகளில் இருந்து நான் இராஜினாமா செய்வதாக இதன்மூலம் அறிவிக்கின்றேன்.”

குருந்தூர்மலை தொல்லியல் தளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குருந்தி விகாரையின் பணிகளை இடைநிறுத்தி வழங்கிய உத்தரவை மீளப்பெறுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததாக  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நீதிபதியை பிரதிவாதியாக பெயரிட்டு தனது தீர்ப்பை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்கள் தொடர்பாக நீதிபதியின் சார்பில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், ஆனால் எவ்வித பலனும் ஏற்படவில்லை எனவும் கொழும்பின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முல்லைத்தீவு நீதிபதி வெளிநாட்டில் இருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களத்தை மேற்கோள்காட்டி தலைநகர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நீதவான் டி. சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.