இலங்கையின் வடக்கு கடல் பரப்பில் மீன்பிடியில் ஈடுபட இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கத் தயார் என இலங்கை பிரதமர் இந்திய ஊடகத்திற்கு தெரிவித்த கருத்துக்கு மீனவர் சங்க தலைவர் ஒருவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 6ஆம் திகதி தமிழகத்தின் தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், இந்திய மீனவர்களுக்கு உரிமம் வழங்கும் இந்தியாவின் முன்மொழிவு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, பிரதமர் தினேஷ் குணவர்தன தனது தயார்நிலையை வெளிப்படுத்தினார்.
“இதுத் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். ஜனாதிபதி இந்தியா வந்தபோது இதுத் தொடர்பில் பேசினார்.”
இந்த திட்டத்தை பரிசீலிப்பீர்களா என, ஊடகவியலாளர் கேட்டபோது, “ஆம் அதற்குத் தயார். இரண்டு தரப்பு மீனவர்களின் ஒத்துழைப்பு அவசியம். இது அரசுகள் தொடர்புடைய விடயமல்ல. மீனவர்கள் தொடர்புடைய விடயம். இந்த விவகாரத்தில் புரிந்துணர்வு அவசியம்.” எனத் தெரிவித்தார்.
ஒக்டோபர் 11ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடமாகாண கடற்றொழில் வலையமைப்பின் செயலாளர் என். எம். பிரதமரின் அறிக்கைக்கு பதிலளித்த ஆலம், இலங்கை அரசு வடக்கு மீனவர்களையும், தென்பகுதி மீனவர்களையும் இரண்டு விதமாக நடத்துவதாக குற்றம் சாட்டினார்.
“வட பகுதியில் இருக்கும் மீனவர்களை ஒரு கண்ணோட்டத்திலும் தென்பகுதியில் இருக்கும் தங்களுடைய மீனவ சமூகத்தை ஒரு கண்ணோட்டத்திலும் பார்க்கின்றனர்.வட பகுதி என்பது தமிழ் பேசும் மக்களை கொண்டதும், அது தமிழர்களின் பகுதி என்ற வகையில் இன்றைய அரசாங்கம் அதனை வகுத்துள்ளது. அந்த கருத்தை தெரிவித்த பிரதமர் அவர்கள் நீர்கொழும்பில் அல்லது சிலாபத்தில் இந்திய மீனவர்கள் தொழில் செய்வார்களாக இருந்தால் இந்த கருத்தை அவர் தெரிவிக்க முடியுமா?அதனை அந்த மக்கள் அனுமதிப்பார்களா?”
வடக்கில் உள்ள இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்களுக்கும் அவர்களைச் சார்ந்துள்ளவர்களுக்கும் ஒரே வருமானம் மீன்பிடித் தொழிலே என மீனவர் சங்கத் தலைவர் என். எம். ஆலம் சுட்டிக்காட்டினார்.
“வளங்களை விற்று பணம் சம்பாதிக்கும் நோக்கத்தைத் தவிர அரசு தாங்கள் செய்கின்ற செயற்பாடு அங்குள்ள மக்கள் வாழ்வதற்கானது இல்லை. வடபகுதி கடல் பரப்பு, இங்கு வாழ்கின்ற தமிழ் மக்களின் வாழ்வாதாரம் இது ஒன்றில் தான் தங்கியுள்ளது. இன்று எந்த தொழில் முறையும் இல்லாமல் கடலை மட்டும் நம்பி கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் மீனவர்களும், அவர்களைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களும் வட பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்.”.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் வளங்களை வெளிநாட்டவர்கள் பெற்றுக்கொள்ள அனுமதிப்போவது இல்லையென ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் வலியுறுத்தினார்.
“அவர்கள் முழுமையாக கடலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இந்த விடையம் புரியாத, இந்த கடல் வளத்தை எவ்வாறு பங்கிட்டுக் கொள்ளலாம்? அல்லது எவ்வாறு குத்தகைக்கு விடலாம்? என்ற பிரதமரின் கருத்து எங்களை யோசிக்க வைக்கிறது. எது எவ்வாறு இருந்தாலும், நாங்கள் அன்று இருந்த நிலைப்பாட்டிலே இன்றும் இருக்கின்றோம். இந்திய மீனவர்கள் எமது கடல் பரப்பில் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை.”