இணையங்கள் ஊடாக ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக எனக்கூறிக்கொண்டு அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள “நிகழ் நிலைக்காப்புச் சட்ட மூலம்” அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடக்கோரி, இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் ஐவரும், சிவில் செயற்பாட்டாளர்கள் நால்வரும் உயர்நீதிமன்றத்தில் சிறப்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தன, செயலாளர் எம்.எப்.எம். பஸீர், ஏற்பாட்டாளர் ஷாலிக விமலசேன, பொருளாளர் நிரோஷ் மைத்திரி, உபதலைவர் நிரோஸ்குமார், மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச பயிற்றுவிப்பாளர் ருக்கி பெர்ணான்டோ, மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் சட்டத்தரணி சுரேன் டி.பெரேரா, செயற்பாட்டாளர் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் அநுருத்த பண்டார, சட்டப் பட்டதாரி டிஷாரா பெர்ணான்டோ ஆகியோரே, இலக்கம் SC/SD/120/23 என்கிற சிறப்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிகழ் நிலைக்காப்புச் சட்டமூலமானது, அரசியலமைப்பினால் பாதுகாக்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்துரிமை, சித்திரவதை மற்றும் மன அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கிற உரிமை, பாகுபாடின்றி நடத்துவதிலிருந்து பாதுகாக்கின்ற உரிமை உள்ளிட்டப் பல அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிகழ் நிலைக்காப்புச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு, பாராளுமன்றத்தில் விசேடப் பெரும்பான்மையும் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் ஊடகத்துறைக்கு அப்பால், நாட்டில் முன்னெடுக்கப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதோடு, நிகழ் நிலைக்காப்புச் சட்ட வரைபை மீள பெறும்வரையில் நாட்டு மக்கள் அழுத்தங்கொடுக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது.
பாராளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் கடந்த 3ஆம் திகதி நிகழ் நிலைக்காப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்டமூலம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், இச்சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் இதுவரையில் சுமார் 50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், ஊடகவியலாளரும் செயற்பாட்டாளருமான தரிந்து உடுவரஹே, ஊடகவியலாளர் றிப்தி அலி உள்ளிட்ட பலர் நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.’