சட்டவரைபுகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு ஆழ்ந்த கவலை

0
65
Article Top Ad

இலங்கை அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது நாடாளுமன்றத்தின் பரிசீலனையில் இருக்கும் இரண்டு சட்டவரைபுகள், சர்வதேச நியமங்களின் அடிப்படையில் இல்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் கூறியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (12) அன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் ரவிணா ஷம்தாசனி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இலங்கையில் மனித உரிமைகள் பதுகாப்பு தொடர்பில் தமது அச்சம் மற்றும் ஏமாற்றத்தை கோடிட்டுக் காட்டியுள்ளார்.

“இலங்கை நாடாளுமன்றத்தின் பரிசீலனையில் இருக்கும் இரண்டு சட்டவரைபுகள்-பயங்கரவாதத்திற்கு எதிராக திருத்தப்பட்ட சட்டம் மற்றும் இணையதள பாதுகாப்பு-அதிகாரிகளுக்கு பரந்துபட்டளவில் மிகவும் கூடிய அதிகாரங்களை அளிக்கிறது மேலும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு முரணாக, மனித உரிமைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என்பது குறித்து எமக்கு ஆழ்ந்த கவலைகள் உள்ளன”.

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டவரைவு மிகவும் சர்ச்சைக்குரியதும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியும், சிறுபான்மையினர் மீது ஒரு ஒடுக்குமுறைக்கான ஒரு ஆயுதமாகவும் பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரவுள்ளது. மேலும் அந்த சட்டம் ஒப்பீட்டளவில் அதிகமாக சிறுபான்மையினருக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது.

பயங்கரவாத தடைச் சட்டம் ஐ நா மனித உரிமைகள் வழிமுறைகளுக்கு அமைவாக இல்லை என்கிற கவலை நீண்டகாலமாக இருந்துள்ளது என்று ஷம்தாசனி அவர்களின் அறிக்கை கூறுகிறது. புதிய சட்டவரைவில் மரண தண்டனையை ஒழிப்பது என்பது போன்ற சில ஏற்பாடுகள் உள்ளன என்றாலும், புதிய சட்டவரைபில் உள்ள பாரபட்சங்கள் தொடர்பில் சில கவலைகள் இன்னும் உள்ளன.

“கருத்துச் சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடல் உரிமைகள் ஆகியவை தொடர்பில் விதிக்கப்படும் தடைகள் அதற்கான தேவை மற்றும் விகிதாசாரத்தின் அடிப்படையை எட்ட தவறிவிட்டது”.

இந்த சட்டவரைவில் பயங்கரவாதம் என்பதற்கு வெளிப்படையாகவே மிகைப்படுத்தபப்ட்ட விளக்கம் உள்ளடக்கப்பட்டுள்ளது மேலும் எவ்விதமான சட்ட மேற்பார்வையுமின்றி பொலிசார் மற்றும் இராணுவத்தினருக்குக்கு-தடுத்து நிறுத்த, விசாரிக்க, சோதனையிட மற்றும் மக்களை தடுத்துவைக்க, கைது செய்ய  மிகவும் பரந்துபட்ட அதிகாரங்கள் உள்ளன என்று அவரது அறிக்கை மேலும் கூறுகிறது.

“ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது, தடை உத்தரவுகளை பிறப்பிப்பது மற்றும் இடங்களை தடை செய்யப்பட்ட பிரதேசங்களாக அறிவிப்பது போன்ற பிரச்சினைகளும் உள்ளன. இவை அனைத்தும் போதுமான பொறிமுறைகள் இன்றி அதிகாரிகளுக்கு அதிகாரங்கள் அளிப்பதும் கவலைகளை ஏற்படுத்துகின்றன”.

இணையதள பாதுகாப்பு சட்டவரைவை பொறுத்தவரையில், அது இணையத்தில் தொடர்பாடல்களை கடுமையாக கட்டுப்படுத்தும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் நம்புகிறது. அதில் பொதுமக்கள் கூறும் விடயங்களை “போலி வாக்குமூலங்கள்” என முத்திரைகுத்தி அதிகாரிகள் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடியதும் அடங்கும்.

இந்த சட்டவரைபில் தெளிவில்லாத பல பகுதிகள் காணப்படுவதாகவும், குற்றங்களுக்கான சில விளக்கங்கள் தன்னிச்சையான மற்றும் தாம் விரும்பியபடி வியாக்கியானம் அளிப்பதற்கு கணிசமானளவிற்கு இடம் கொடுக்கிறது எனவும், அது அனைத்து வகையான நியாயமான கருத்து வெளிப்பாடுகளையும் குற்றமயமாக்கும் சாத்தியங்களை ஏற்படுத்தி, கருத்துச் சுதந்திரத்தின் மீது குரல்வளையை நெறிக்கும் அளவிற்கு இறுக்கமான பிடியை மேற்கொள்வதற்கான மோசமான சூழலை ஏற்படுத்தக்கூடும் எனவும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இலங்கை அரசு மேலும் அர்த்தமுள்ள வகையில் சிவில் சமூகம், மற்றும் ஐ.நாவின் சுயாதீன நிபுணர்கள் ஆகியோருடன் மேலும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அந்த சட்டவரைவுகளில் கணிசமான திருத்தங்களை மேற்கொண்டு, சர்வதேச மனித உரிமைகள் தொடர்பில் இலங்கைக்கு உள்ள கடப்பாடுகளை முழுமையாக ஏற்று நடக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் ஐ நா மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.