பிரான்ஸ் செல்வதற்காக முற்பட்ட ஒருவர் லெபனான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை மீள நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு லெபனான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகவர் ஒருவர் ஊடாக பிரான்ஸ் செல்வதற்காக கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் குறித்த நபர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
விமானம் மூலம் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று பின்னர் பிரான்ஸ் செல்வதே அவரின் திட்டமாக இருந்துள்ளது.
எனினும், குறித்த நபர் தற்போது லெபனான் நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரின் மனைவி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
குடும்ப வறுமை காரணமாக பிரான்ஸ் செல்வதற்காக தனது கணவர் கடந்த ஜுன் மாதம் நாட்டில் இருந்து வெளியேறினார்.
எனினும, அவர் லெபனான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஐந்து மாதங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தற்போது இஸ்ரேலில் கடுமையாக யுத்தம் இடம்பெறுகின்றது.
இந்நிலையில், தாம் மிகவும் அச்சமடைந்துள்ளதாகவும், கணவரை நாட்டிற்கு அழைத்துவர உரியத் தரப்பினர்கள் உதவ வேண்டும் எனவும் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்