தர்மசாலாவில் 20 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்தை பழி தீர்த்தது இந்தியா

0
101
Article Top Ad

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ண போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

நடப்பு உலகக் கிண்ண தொடரில் இந்திய அணி தனது ஐந்தாவது போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. இந்தப் போட்டி தர்மசாலா மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த போட்டியில் இந்திய அணிக்கு 274 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

தர்மசாலா மைதானத்தின் மிகப்பெரிய இலக்கை துரத்தி இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

20 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்தை பழி தீர்த்தது இந்தியா
தர்மசாலா மைதானத்தில் 227 என்ற மிகப்பெரிய இலக்கை துரத்தி அடித்தமையே இதுவரையில் சாதனையாக இருந்து வந்தது.

2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற போட்டியில், இந்திய அணிக்கு எதிராக 47.2 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது.

இதனிடையே, இன்றை போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி உலகக்கிண்ண போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியுள்ளது.

இந்தியா கடைசியாக 2003 மார்ச்சில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில்  நியூசிலாந்தை தோற்கடித்திருந்தது.

இதற்குப் பிறகு, இருபதுக்கு இருபது உலகக் கிண்ணம் (2007, 2016 மற்றும் 2021), 2019 ஒருநாள் உலகக் கிண்ண அரையிறுதி மற்றும் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்திருந்தது.

நியூசிலாந்தை 273 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய சாமி
இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 273 ஓட்டங்களை குவித்தது.

டேரல் மிட்செல் சதம் அடித்து 127 பந்துகளில் 130 ஓட்டங்களை குவித்தார். ரச்சின் ரவீந்திர 87 பந்துகளில் 75 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

கிளென் பிலிப்ஸ் 23 ஓட்டங்களை குவித்தார். அவரைத் தவிர வேறு எந்த துடுப்பாட்ட வீரரும் 20 ஓட்டங்களை அடையவில்லை.

நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடிய போது தொடக்கம் முதலே இந்திய அணி பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

ஆனால் இரண்டு பெரிய பிடியெடுப்புகளை கோட்டைவிட்டதால் மூன்றாவது விக்கெட்டுக்கு பெரிய இணைப்பாட்டம் கிடைத்திருந்தது.

ஆனால் இறுதி நேரத்தில் சிறப்பாக பந்து வீசிய மொகமட் சாமி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்தின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்தினார்.

விராட் கோலி அசத்தல் துடுப்பாட்டம்
274 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

விராட் கோலி 104 பந்துகளில் 95 ஓட்டங்களை குவித்தார். ரோகித் சர்மா 46 ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 39 ஓட்டங்களையும், கே.எல் ராகுல் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூசிலாந்து அணி சார்பில் லோகி பெர்குசன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஒரு சமயத்தில் இந்திய அணி 191 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ஒரு பக்கம் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிய, மறுபுறம் விராட் கோலி நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியை வெற்றிபாதைக்கு அழைத்துச் சென்றார்.

போட்டியின் ஆட்ட நாயகனாக மொகமட் சாமி தெரிவுசெய்யப்பட்டார். இந்த வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.