எமில் காந்தனை தீவிரவாதப் பட்டியலில் இருந்து நீக்கியது ஏன்?

0
118
Article Top Ad

தீவிரவாத தடைப்பட்டியலில் இருந்த இரண்டு முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை அரசாங்கம் கடந்த இரு வாரங்களுக்கு முன் நீக்கியிருந்தது.

தீவிரவாத தடை பட்டியலில் இருந்து இருவரையும் பாதுகாப்பு அமைச்சே இவ்வாறு நீக்கியிருந்தது.

எமில் காந்தன், முருகேசு ஜேசுதாசன் ஆகிய இருவரே இவ்வாறு நீக்கப்பட்டனர்.

இலங்கையில் எமில் காந்தன் மிகவும் பிரபலமான கதாபாத்திரம்

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வடக்கில் வாக்குகளைப் பெறுவதைத் தடுப்பதற்காக விடுதலைப் புலிகளுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கொண்டதாகக் கூறப்படும் பணப் பரிமாற்றத்தில் எமில்காந்தன் இடைத்தரகராகச் செயல்பட்டதாக கடந்தகாலத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் தென்னிலங்கை ஊடகங்களில் எமில்காந்தன் பற்றிய தகவல்கள் வெளியாகியிருந்தன.

சமாதானப் பேச்சுவார்த்தையின் போது புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தராக செயற்பட்டவராக எமில்காந்தன் இருந்தார்.

எமில் காந்தன் ஏன் விடுவிக்கப்பட்டார்?

2001-2003ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுக்களின் போது எமில் காந்தன் ‘அலரிமாளிகை’ க்கு அடிக்கடி வந்துச் சென்றதாகவும் கூறப்பட்டது. குறித்த காலப்பகுதியில் எமில் காந்தன் கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.

எவ்வாறாயினும், 2005 ஆம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியின் பின்னர் எமில் கந்தன் நாட்டை விட்டு வெளியேறி டுபாயில் வாழத் தொடங்கினார்.

எமில் காந்தன், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நன்கு அறிந்தவர் எனக் கூறப்படுகிறது.

எமில்காந்தனின் பெயர் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து திடீரென நீக்கப்பட்டமை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

பயங்கரவாதத் தடைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள எமில் காந்தன், வரவிருக்கும் காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் சில அரசியல் முயற்சியில் முக்கிய பங்கு வகிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு அரசியலை குறிவைக்கிறாரா எமில்

எமில் காந்தனின் பெயர் பயங்கரவாத தடைப் பட்டியலில் இடம் பெற்றிருந்த போதும், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பல நபர்களை டுபாய்க்கு வரவழைத்து அவர் பல கூட்டங்களை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது, வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உள்ள அரசியல் பிரிவுகளுக்கு இடையில் நெருக்கடிகள் உருவாகியுள்ளன.

பல கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகியுள்ளன.

எமில் காந்தன், கூட்டமைப்பில் இருந்து விலகும் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துதுரையாடி பரந்தப்பட்ட கூட்டணி ஒன்றை அமைப்பதற்கான முய்சிகளை மேற்கொள்ளக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

2010ஆம் ஆண்டு எமில் காந்தனுக்கு இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், 2014ஆம் ஆண்டு அவர் தடைசெய்யப்பட்ட தீவிரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.