மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் 10 பிரதிவாதிகள் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட தீர்ப்பை இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முர்து பெர்னாண்டோ, பி.பத்மன் சூரசேன, ஏ.எச்.எம். டி. நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு மேல் நீதிமன்றம் வழங்கிய மேற்படி உத்தரவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவிருந்தது.
இந்த வழக்கில் ஏனைய குற்றச்சாட்டுகளை விசாரிக்க தடை விதித்து, தீர்ப்பை வழங்கிய 3 நீதிபதிகள் கொண்ட குழாமுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், அவரது மருமகன் அர்ஜுன் அலோசியஸ், பேர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் மற்றும் அதன் பணிப்பாளர்கள் மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பத்தினிகே சமரசிறி உள்ளிட்ட பத்து பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.