வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 10ஆயிரம் ரூபா வாழ்க்கைச் செலவு கொடும்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று தமது வரவு – செலவுத் திட்ட உரையில் கூறினார்.
குறித்த அதிகரிப்பை தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி வாயால் கூறுகிறார். ஆனால், அது சாத்தியமற்றது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் இவ்வாறு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது.
அதனை தனியார் துறையினரும் பின்பற்ற வேண்டுமென அரசாங்கம் கூறியது. ஆனால், அது நடைமுறைக்குச் சாத்தியப்படவில்லை. எந்தவொரு தனியார் நிறுவனமும் அரசாங்கம் கூறிய சம்பள அதிகரிப்பை வழங்கவில்லை.
இந்நிலையில், அரசத்துறைக்கு சம்பளத்தை அதிகரிக்கும் அதிகாரம் அரசாங்கத்திடம் உள்ளதை போன்று தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்கும் அதிகாரம் கம்பனிகளிடம் உள்ளது.
எந்தவொரு தோட்டத்திலும் முறையாக ஆயிரம் ரூபா தினச் சம்பளம் வழங்கப்படுவதில்லை. இதுதொடர்பில் ஜனாதிபதி வாய்திறக்கவில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமென்ற வார்த்தையை கூட அவர் பிரயோகித்திருக்கவில்லை.
15 முதல் 20ஆயிரம் சம்பளத்தை பெற்று இந்த பொருளாதார நெருக்கடியான சூழலில் எவ்வாறு வாழ முடியும் என ஜனாதிபதியிடம் தோட்டத் தொழிலாளர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
காலங்காலமாக ஐ.தே.கவுக்கு வாக்களித்தும் தமக்கு எவ்வித நன்மைகளையும் ஐ.தே.க செய்யவில்லை எனக் கூறும் தொழிலாளர்கள், ஏனைய தொழிலாளர்கள் மீது அக்கறை செலுத்தும் ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களை மாத்திரம் அவர் அதிகாரத்தில் இருக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கண்டுகொள்வதில்லையெனவும் குற்றம்சாட்டுகின்றனர்.
கவச்சிகரமான வார்த்தைகளை கூறி மலையக தொழிலாளர்களை ஏமாற்றும் பணியை நிறுத்திவிட்டு ஆக்கப்பூர்வமான பணிகளை செய்ய ஜனாதிபதி முன்வர வேண்டும் எனவும் தோட்டத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
பொது மக்களின் வாழ்க்கை செலவு கடந்த இரண்டு வருடங்களில் 3 மடங்காக அதிகரித்தும் தமக்கு மாத்திரம் சம்பள அதிகரிப்புக்கான எவ்வித வழிவகைகளும் இடம்பெறுவதில்லை எனக் கூறும் தொழிலாளர்கள் அரசாங்கத்துக்கு கம்பனிகளுக்கும் ஆதரவாக செயல்படும் தொழிற்சங்கள், மக்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும் எனவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.