13ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடந்த மாதம் 5ஆம் திகதி அகமதாபாத்தில் தொடங்கியது.
10 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. கடந்த ஞாற்றுக்கிழமை லீக் போட்டிகள் முடிவடைந்தன.
இதன் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பங்களாதேஷ், இலங்கை, நெதர்லாந்து, ஆகிய நாடுகள் 5 முதல் 10ஆவது இடங்களை பிடித்து வெளியேறின.
2 நாள் ஓய்வுக்கு பிறகு அரையிறுதி போட்டி தொடங்குகிறது. இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் முதல் இடத்தை பிடித்த இந்தியா- நான்காம் இடத்தை பிடித்த நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. தோல்வியை சந்திக்காமல் 9 ஆட்டத்திலும் வென்று 18 புள்ளிகளுடன் நாக்அவுட் சுற்றான அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
லீக் ஆட்டங்களில் அபாரமாக ஆடிய இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா 8ஆவது முறையாக அரையிறுதியில் விளையாடுகிறது. 2 முறை சாம்பியனான அந்த அணி 4ஆவது முறையாக இறுதிப் போட்டியில் நுழையும் வேட்கையில் உள்ளது. கடந்த உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் 18 ரன்னில் இந்திய அணி தோற்று இருந்தது.
அதற்கு நாளைய அரை இறுதியில் பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த 22ஆம் திகதி தர்மசாலாவில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்திசாயத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தது. இரு அணிகள் இடையே கடைசியாக நடந்த 5 ஒருநாள் போட்டியில் இந்தியா 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
இதனால் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் நம்பிக்கையுடன் விளையாடும். மேலும் சொந்த மண் என்பதால் கூடுதல் பலமாகும். இந்த தொடரில் மும்பையில் நடந்த இலங்கைக்கு எதிரான பேட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி இருந்தனர்.
அது நேரத்தில் நியூசிலாந்தும் அபாரமாக விளையாடக் கூடியது. அந்த அணி நாக்அவுட் சுற்றில் கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடி இருந்தது. இதனால் இந்திய அணி எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும். அரையிறுதி என்பதால் நெருக்கடி கூட ஏற்படும். இதனால் கவனமுடன் ஆடுவது அவசியமானது.
வான்கடே ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும். இதனால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். நாணயசுழற்சியில் வெல்லும் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்யும். முதல் 15 ஓவர் துடுப்பாட்டத்தை முடிவை நிர்ணயம் செய்யும்.
நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது. கடந்த போட்டிகளில் விளையாடிய வீரர்கள் இடம் பெறு வார்கள்.
துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி சமபலத்துடன் திகழ்கிறது. துடுப்பாட்டத்தில் விராட் கோலி, தலைவர் ரோகித் சர்மா ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.
விராட் கோலி 594 ஓட்டங்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார். அவர் 2 சதமும், 5 அரை சதமும் அடித்துள்ளார். இன்னும் ஒரு சதம் அடித்தால் அவர் டெண்டுல்கரின் 49 செஞ்சுரி சாதனையை முறியடிப்பார். விராட் கோலி சமீபத்தில்தான் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்து இருந்தார்.
ரோகித் சர்மா ஒரு சதம், 3 அரை சதங்களுடன் 503 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அவர் அதிரடியாக விளையாடி வருகிறார். இது தவிர ஷ்ரோயாஸ் அய்யர் 421 ரன்னும் (1 சதம், 3 அரை சதம்), லோகேஷ் ராகுல் 347 ஓட்டங்களும் (1 சதம், 1 அரை சதம்), சுப்மன் கில் 258 ஓட்டங்களும் (3 அரைசதம்) எடுத்து நல்ல நிலையில் உள்ளனர்.
இந்திய அணி வேகப்பந்து மற்றும் சுழற்பந்தில் சிறப்பான நிலையில் இருக்கிறது. மிகவும் முக்கியமான அரையிறுதியில் பந்துவீச்சு நன்றாக அமைய வேண்டும்.
பும்ரா 17 விக்கெட்டும், முகமது சமி, ஜடேஜா தலா 16 விக்கெட்டும், குல்தீப் யாதவ், 14 விக்கெட்டும், முகமது சிராஜ் 12 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். சமிக்கு முதல் 4 போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 5 ஆட்டத்தில்தான் அவர் 16 விக்கெட்டை எடுத்துள்ளார். நெதர்லாந்துக்கு எதிராக மட்டுமே விக்கெட் எடுக்கவில்லை.
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி தொடர்ந்து 3ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. 2015, 2019 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து கோப்பையை இழந்தது. அந்த அணி 9-வது தடவையாக அரைஇறுதியில் விளையாடுகிறது.
நியூசிலாந்து அணி லீக் சுற்றில் 5 ஆட்டத்தில் வெற்றி பெற்றது 4 போட்டியில் தோற்றது.
இந்தியாவை போலவே நியூசிலாந்தும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது. துடுப்பாட்டத்தில் ரச்சின் ரவீந்திரா (566 ரன், 3 சதம், 2 அரை சதம்), மிச்சேல் (418 ரன் 1 சதம், 2 அரை சதம்), கான்வே (357 ரன்), பிலிப்ஸ் மற்றும் தலைவர் வில்லியம்சன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
சான்ட்னெர் (16 விக்கெட்), போல்ட் (13 விக்கெட்), பெர்குசன் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள்.
இறுதிப்போட்டிக்குள் நுழைய இந்தியாவும், நியூசிலாந்தும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.