விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் மகள் துவாரகாவின் பெயரால் வெளியாகியுள்ள உரையில் உண்மைத்தன்மை இருக்குமாக இருந்தால் அதனை நாம் வரவேற்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
புலிகள் இயக்கத்தின் முத்த உறுப்பினர்கள் தளபதிகளாக இருந்தவர்கள் மற்றும் இராணுவ தரப்பு உயரதிகாரிகள் புலிகளின் தலைவர் உட்பட அக்குடும்பத்தினர் அனைவரும் யுத்தத்தில் உயிர் நீத்தவிட்டார்கள் என்பதை மிகத் தெளிவாக கூறியுள்ளார்கள்.
ஆயினும், துவாரகாவின் பெயரால் ஓர் அணியினர் துவாரகா உயிருடன் இருப்பதாகவும் அவர் பேசிய உரை என தெரிவித்து ஓர் உரையை வெளியிட்டுள்ளனர்.
அந்த உரையில் சர்வதேசம் தீர்வை வைத்தால் பரீசீலிப்போம் எனவும் அரசியல் போராட்டங்கள் ஊடாகவே தீர்வை பெறமுடியும் என்பதையும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
அதனடிப்படையில், அந்த செய்தியில் உண்மைத் தன்மை இருக்குமென்றால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அதனை வருவேற்கின்றது.
ஏனெனில், நாம் இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னர் அரசியல் ரீதியாகவே எமது மக்களுக்கான அரசியல் உரிமைக்கு தீர்வுக்கு அரசியல் ரீதியாகவே முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.
அதே போன்றே துவாரகாவின் பெயரால் இந்த உரையை வெளியிட்ட குழுவினர் அந்த மென்மையான சொல் வடிவத்தையே வெளியிட்டுள்ளனர்.
இத்தகைய மென்போக்கு தன்மையுடைய நிலைப்பாட்டை குறித்த தரப்பினர் முன்கூட்டியே எடுத்திருப்பார்களாக இருந்தால் இவ்வாறான பேரழிவு ஏற்பட்டிருப்பதை தவிர்த்திருக்க முடியும் என்பதுடன் துவாரகாவின் பெயரால் நிதி சேகரிப்பு மற்றும் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்று வருவதையும் தடுத்திருக்க முடியும்.
எனவே இது தொடர்பாக புலம்பெயர் சமூகம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.