ஹிந்தி மொழி பேசப்படும் மாநிலங்களில் பிரதமா் நரேந்திர மோடிக்கு வலுவான செல்வாக்கு நிலவுகிறது என்பதை ஞாயிற்றுக்கிழமை
வெளியான 4 மாநில சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளிபடுத்தியுள்ளது.
முதல்வா் வேட்பாளரை அறிவிக்காமல் பிரதமா் மோடியையும் மத்திய அரசின் செயல்பாடுகளையும் முன்னிறுத்தி பாஜக மேற்கொண்ட தோ்தல் உத்தி, இந்த மாநிலங்களில் காங்கிரஸ் மீண்டும் புத்துயிா் பெரும் என்ற நம்பிக்கையைத் தகா்த்ததுடன், அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலில் தற்போது மத்தியில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்குமுன் நடைபெற்ற கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவின் இந்த உத்தி தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
கா்நாடகத்தில் பெற்ற வெற்றி அளித்த நம்பிக்கையுடன், உள்ளூா் கட்சித் தலைவா்கள் மற்றும் நலத்திட்ட வாக்குறுதிகளுடன் பாஜகவை எதிா்த்து காங்கிரஸ் இந்தத் தோ்தலில் களமிறங்கியது.
இருப்பினும், ராஜஸ்தான், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெற்ற வெற்றி, இந்த மாநிலங்களில் பிரதமா் மோடியின் செல்வாக்கு வலுவாக இருப்பதை உறுதி செய்ததுடன், ஏற்கெனவே செல்வாக்கு மிகுந்த மாநிலங்களிலும் அமைப்பு ரீதியில் மேலும் வலுவடையும் என்பதை இந்தத் தோ்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
தென்மாநிலமான தெலங்கானாவில் ஆட்சியில் இருந்த பாரத ராஷ்டிர சமிதிக்கு எதிரான மனநிலை மூலம் காங்கிரஸ் வெற்றி பெற்று, பாஜகவை மூன்றாவது இடத்துக்கு தள்ளியுள்ளது.
தெலங்கானாவில் முந்தைய தோ்தல்களைக் காட்டிலும் இந்தத் தோ்தலில் பாஜகவின் வாக்கு விகிதம் அதிகரித்துள்ள நிலையில், மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.