இலங்கையின் ஓய்வு பெற்ற படைத் தளபதிகளான சவேந்திர சில்வா மற்றும் ஜகத் ஜெயசூரிய ஆகியோர் செய்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்காக அவர்களுக்கு எதிராக தடை விதிக்க வேண்டும என வலியுறுத்தி இரண்டு பிரேரணைகள் பிரித்தானிய அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
மனித உரிமைகள் குழுவான சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் இந்த பிரேரணைகளை சமர்ப்பித்துள்ளது.
இலங்கையில் சர்ச்சைக்குரிய துறைமுக நகரத் திட்டத்திற்கான முதலீட்டை ஊக்குவிப்பதற்காக இந்த ஆண்டு பிரித்தானியாவின் வெளிவிவகாரச் செயலர் டேவிட் கேமரூன் பணியமர்த்தப்பட்டார்.
இந்நிலையில், இலங்கைக்கு எதிராக மாக்னிட்ஸ்கி பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும், துறைமுக நகர் ஊக்குவிப்பு பணியில் இருந்து டேவிட் கேமரூன் விலக வேண்டும் எனவும் எட்டு மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற பாலியல் வன்கொடுமை தடுப்பு உச்சிமாநாட்டில், மோதல் தொடர்பான பாலியல் வன்முறைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் தனிநபர்களுக்கான பொருளாதாரத் தடைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக பிரித்தானியா அறிவித்திருந்தது.
“பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் ஜோசப் கேம்ப் எனப்படும் தடுப்புக்காவல் தளத்திற்கு தலைமை தாங்கியதற்காக ஓய்வு பெற்ற இலங்கை இராணுவ ஜெனரல் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய மாக்னிட்ஸ்கி பொருளாதாரத் தடைகளின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மின் சூகா, இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்த ஐ.நா குழுவில் இருந்தார்.
“முகாம்களில் சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களில் தமிழர்கள் பலர் இப்போது பிரித்தானியாவில் புகலிடம் பெற்றுள்ளனர்.
பிரித்தானியாவில் பாலியல் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைப்பதற்கும் பிரகடனப்படுத்திய நிலையில், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியது ஆழ்ந்த ஏமாற்றத்தை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டும் ஜெனரல் ஜகத் ஜெயசூரியவிற்கு எதிராக போர் குற்ற வழக்குகள் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்துடன் லத்தின் அமெரிக்க பங்காளிகள் இணைந்து தாக்கல் செய்தன.
பின்னர் 2019ஆம் ஆண்டு சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் மற்றும் சர்வதேச நீதிக்கான அவுஸ்திரேலிய மையம் அவருக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் ஒரு குற்றப் புகாரைப் பதிவுசெயதிருந்தது.
எனினும் அவருக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த ஐந்தாம் திகதி பிரித்தானிய பாராளுமன்றில் “இலங்கை தமிழர்கள் மற்றும் மனித உரிமைகள்” என்ற தலைப்பில் விசேட விவாதம் நடத்தப்பட்டிருந்தது.
இதில் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன், போர்க் குற்றவாளிகள் மீது பொருளாதாரத் தடைகள் அவசரமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை பலரும் முன்வைத்திருந்தனர்.
இலங்கைக்கான பொருளாதாரத் தடைகளின் அடிப்படையில் பிரித்தானியா அமெரிக்கா மற்றும் கனடாவை விட பின்தங்கியுள்ளது என்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் தெளிவான செய்தியாகும்.