இந்தியாவில் இருந்து இலங்கை அகதிகள் வெளிநாடு செல்ல முயற்சி: என்.ஐ.ஏ விசாரணைகளை ஆரம்பித்தது

0
51
Article Top Ad

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் இலங்கை பிரஜைகளை நாடு கடத்த முயன்றமை தொடர்பான இரண்டு முறைப்பாடுகள் தொடர்பில் இந்திய தேசிய புலனாய்வுத் துறை (என்.ஐ.ஏ) விசாரணைகளை தொடங்கியுள்ளது.

கடந்த மாதம், கொல்லம் கிழக்கு மற்றும் பள்ளித்தோட்டம் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளை பொறுப்பேற்குமாறு என்.ஐ.ஏ.வுக்கு உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

பள்ளித்தோட்டத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டில் 13 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கொல்லம் கிழக்கில் 11 பேர் உள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம், 6ஆம் திகதிகளில் கொல்லம் மாவட்டத்தில் வாடி துறைமுகம் மற்றும் அம்பாடி லாட்ஜ், கடற்கரையில் இலங்கை பிரஜைகளை இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினர் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்ட இலங்கைப் பிரஜைகள் கனடாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.

அதற்காக அவர்கள் பல மீன்பிடி படகோட்டிகளுடன் தொடர்பை கொண்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட 2 குழந்தைகள் உட்பட 24 பேரும் நாகப்பட்டினம், வேலூர், சென்னை, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் இருந்து கொல்லத்துக்கு வந்துள்ளனர்.

அவர்களில் சிலர் இலங்கையிலிருந்து வந்து, தரகர்களிடம் பணம் கொடுத்து தமிழ்நாட்டில் தங்கியிருந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

என்றாலும், பின்னர் அவர்களுக்கு கேரள உயர்நீதிமன்றம் பிணை வழங்கியது.

எவ்வாறாயினும், விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின் பேரில் விசாரணையை மேற்கொள்ள என்.ஐ.ஏ தற்போது முடிவு செய்துள்ளது.

அண்மைக்காலமாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் நடந்த பல மனித கடத்தல் சம்பவங்கள் குறித்து என்.ஐ.ஏ விசாரணைகளை தொடங்கியுள்ளது.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் கடத்தல் முயற்சிகளை ஒருங்கிணைப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

முன்னாள் புலி உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளமையின் பின்புலத்திலேயே இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.