சகல தமிழ் அரசியல் கைதிகளும் உடனே விடுவிக்கப்பட வேண்டும்! – வடக்கு வரும் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிக்கத் தீர்மானம்

0
68
Article Top Ad

சிறைச்சாலையில் வாடும் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி எதிர்வரும் ஜனவரி மாதம் மாதம் முற்பகுதியில் வடக்கு மாகாணத்துக்கு வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மகஜர் கையளிப்பதற்குக் குரலற்றவர்களின் குரல் அமைப்பு தீர்மானித்துள்ளது.

சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது.

வடக்குக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதிக்கு 28 வருடங்களாகச் சிறையில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் மகஜர் ஒன்றைத் தயாரிக்கும் வகையில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இடையேயான மேற்படி சந்திப்பைக் குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் சமூகத்தினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவித்த குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன்,

“28 வருடங்களுக்கு மேலாகச் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை வழங்கவுள்ளோம். இதற்குச் சகல பொது அமைப்புக்களும் ஒன்றிணைய வேண்டும். பொது மன்னிப்பின் அடிப்படையில் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.” – என்றார்.