தென் கொரியாவின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே-மியுங் தெற்கு துறைமுக நகரமான பூசானுக்கு விஜயம் செய்தபோது கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்றைய தினம் (02) தென் கொரியாவின் துறைமுக நகரமான பூசானில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற போதே விமான நிலையத்தில் வைத்து கத்திக்குத்துக்கு ஆளாகியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
“கத்திக்குத்துக்கு இலக்கான லீ, சுயநினைவுடன் இருப்பது மாத்திரமன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் நிகழ்ந்த போது விமான நிலையத்தின் இடத்தை சுற்றிப்பார்க்கும்போது அடையாளம் தெரியாத ஒருவரால் லீ தாக்கப்பட்டுள்ளார், மேலும் இந்தத் தாக்குதலினால் அவரது கழுத்தில் சுமார் 1 செமீ ஆழத்திற்கு காயம் ஏற்பட்டுள்ளது.
தாக்கியவர் சுமார் 50 அல்லது 60 வயது மதிக்கத்தக்கவராகத் தோன்றியதாகவும், அவர் லீயின் பெயரைக் கொண்ட காகித கிரீடத்தை அணிந்திருந்ததாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் ஆட்டோகிராப் கேட்டு லீயை அணுகி, பின்னர் திடீரென முன்னோக்கிச் சென்று அவரைத் தாக்கியுள்ளார் என்று செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடத்தியவர் விரைவில் அடக்கப்பட்டு சம்பவ இடத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அந்நாட்டு அதிபர் யூன் சுக் யோல், இது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும் அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார், மேலும் லீக்கு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய அவர் லீ விரைவாக குணமடைய சிறந்த கவனிப்பை வழங்குமாறும் குறிப்பிட்டிருந்தார்.
தென் கொரியாவில் துப்பாக்கி பயன்பாட்டுக்கு அதிக கட்டுப்பாடுகள் இருக்கின்ற நிலையில், இவ்வாறான கூரிய ஆயுதங்களின் தாக்குதல்கள் அதிகம் நிகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.