ஹூதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த செங்கடலில் நிலைநிறுத்தப்படும் இலங்கை கப்பல்

0
57
Article Top Ad

ஹூதி கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு பங்களிக்கும் வகையில் செங்கடல் பகுதியில் இலங்கை கடற்படையின் கப்பலை நிலைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சிறிமாவோ பண்டாரநாயக்க நினைவு காட்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

“செங்கடல் பகுதியில் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களால் உலகளாவிய கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் கப்பல்கள் செங்கடலில் செல்லாமல் தென்னாப்பிரிக்காவை சுற்றி செல்ல நேரிடும். அவ்வாறு செயல்பட்டால் உலகளாவிய கப்பல் போக்குவரத்து மற்றும் சரக்கு பரிமாற்றத்துக்கான செலவுகள் அதிகரிக்கும்.

இதனால் ஏனைய நாடுகளுடன் இணைந்து செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்தை பாதுகாக்கும் வகையில் இலங்கை கடற்படையின் பாதுகாப்பு கப்பல் நிலைநிறுத்தப்படும்.‘‘ எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானிய ஆதரவு கிளர்ச்சியாளர்களாக கருதப்படும் ஹூதி போராளிகள் செங்கடல் பகுதியில் பயணிக்கும் கப்பல்கள் மீது கடந்த சில மாதங்களாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் செங்கடல் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி வேண்டியதன் அவசியத்தை இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

அமெரிக்கா, இந்திய உட்பட பல நாடுகள் தமது பாதுகாப்பு கப்பல்களை செங்கடல் பகுதியில் பாதுகாப்புக்காக நிலைநிறுத்தியுள்ள நிலையில், இலங்கையும் தற்போது இந்த பட்டியலில் இணைய உள்ளது. ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு விரைவில் அமுல்படுத்தப்படும் என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.