இந்தியாவுடனான முறுகல்களுக்கு மத்தியில் மாலைத்தீவு ஜனாதிபதி சீனா விஜயம்

0
93
Article Top Ad

இந்தியாவுடனான இராஜதந்திர மோதல்களுக்கு மத்தியில் மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு சீனாவுக்கு அரசுமுறை பயணமொன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கொண்டுள்ளார்.

மொஹமட் முய்ஸு ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் உத்தியோகப்பூர்வ விஜயமாக இது உள்ளது.

சீன அதிபர் சி ஜின் பிங்கின் அழைப்பின் பேரில் இந்த விஜயத்தை ஜனாதிபதி மொஹமட் முய்ஸு மேற்கொண்டுள்ளதுடன், மாலைத்தீவின் முதல் பெண்மணி சஜிதா முகமதும் இந்த விஜயத்தில் ஒரு பங்காளராக உள்ளார்.

மாலைத்தீவின் நெருங்கிய அண்டை நாடான மற்றும் சுற்றுலாவின் குறிப்பிடத்தக்க முலாதாரமாக உள்ள இந்தியாவுடனான இராஜதந்திர முறுகல்களின் பின்னணியில் ஜனாதிபதி முய்ஸுவின் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

‘அவுட் இந்தியா’ பிரச்சாரத்தின் மூலம் மாலைத்தீவு ஜனாதிபதித் தேர்தலில் பிரபல்யமடைந்து அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி முய்ஸு, சீன சார்ப்பு கொள்கையுள்ளவர் என பரவலான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

இவர் ஜனாதிபதியான மறுநாளே மாலைத்தீவில் இருந்து இந்திய படைகள் அகற்றப்படும் என சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். இதனால் தேர்தலின் பின்னர் இருநாட்டு உறவுகளில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு தசாப்தமாக மாலைத்தீவில் தமது செல்வாக்கை நிலைநிறுத்த இந்தியாவும் சீனாவும் கடுமையாக போட்டியிடுகின்றன. என்றாலும், மாலைத்தீவின் தற்போதைய ஜனாதிபதி அங்கு சீனாவின் செல்வாக்கையே விரும்புகிறார். இதனால் சீனாவின் “belt and road initiative” திட்டத்திலும் மாலைத்தீவு இணைந்துள்ளது.

மாலைத்தீவு ஜனாதிபதியின் சீன விஜயத்தை இந்தியா இராஜதந்திர மட்டத்தில் தமது உளவுத்துறை மட்டத்திலும் உற்றுநோக்கி வருகிறது. இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவில் கடல் விளையாட்டுகளில் ஈடுபட்டதை மாலைத்தீவின் சில அமைச்சர்களும் மற்றும் அரசியல்வாதிகளும் விமர்சித்திருந்தனர்.

இதற்கு இந்தியா கடுமையான கவலையை மாலைத்தீவுக்கு வெளிப்படுத்தியிருந்தது. இதனால் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட மூன்று அமைச்சர்களுக்கு இடைக்கால தடையையும் மாலைத்தீவு அரசாங்கம் வெளியிட்டிருந்தது.