அவுஸ்திரேலியாவில் நாஜி வணக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சின்னங்களை காட்சிப் படுத்துதல் என்பன தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது.
காசாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போருக்கு மத்தியில் இந்த உத்தரவு வந்துள்ளது.
அண்மைய மாதங்களில் குறிப்பாக காசா மீது இஸ்ரேலின் குண்டுவீச்சுக்கு மத்தியில், வெறுப்பு மற்றும் யூத-விரோத சம்பவங்களின் அதிகரிப்புக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் பதிலளிப்பதால், நாஜி வணக்கம் செலுத்துவதையும் அதனுடன் தொடர்புடைய சின்னங்களை காட்சிப்படுத்துவது அல்லது விற்பனை செய்வதையும் தடை செய்யும் சட்டம் திங்கள் (08) முதல் அமுலுக்கு வந்துள்ளது.
“நாஜி வணக்கத்தை பொதுவில் செய்வது அல்லது நாஜி சின்னங்களை பகிரங்கமாக காட்சிப்படுத்துவது அல்லது வர்த்தகம் செய்வது இப்போது சட்டவிரோதமானது” என்று அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் மார்க் ட்ரேஃபஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பயங்கரவாத செயல்களுக்கு வசைபாடுவது குற்றவியல் குற்றம் என்பதையும் புதிய சட்டங்கள் உறுதி செய்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த டிசம்பர் 06 ஆம் திகதி அவுஸ்திரேலிய பாராளுமன்றில் ஒரு மனதாக குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
இது தடைசெய்யப்பட்ட நாஜி சின்னங்களை காட்சிப்படுத்துவது அல்லது நாஜி வணக்கம் செலுத்துவது என்பன 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனையுடன் கூடிய குற்றவியல் குற்றமாகும் என்பதை கோடிட்டுக் காட்டுகின்றது.
2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போர் தொடங்கியதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு அதிகரித்து வரும் நிகழ்வுகளுக்கு மத்தியில் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.