இலங்கை பொலிஸ் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கையின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) எழுப்பிய கவலைகளுக்கு மத்தியில் அமெரிக்காவும் கவலை தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
எனினும், சட்ட அமுலாக்கச் செயற்பாடுகள் சட்டத்தின் ஆட்சி மற்றும் உரிய நடைமுறைகளின் கொள்கைகளுக்கு இணங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“இந்த சமநிலையை அடைவது நீதி மற்றும் பொது நம்பிக்கையைப் பேணுவதற்கு இன்றியமையாதது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
‘யுக்திய’ நடவடிக்கையுடன் தொடர்புடைய தேடுதல் நடவடிக்கைகளின் போது கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தை பற்றிய அறிக்கைகள் குறித்து உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ள பின்புலத்திலேயே அமெரிக்க தூதுவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் இந்த நடவடிக்கை குறித்து கவலைகளை வெளிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.