சமிந்த விஜேசிறி தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய ரூ.90 மில்லியனை பெற்றுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கோரிக்கை விடுத்துள்ளார்.
சமிந்த விஜேசிறியின் கருத்துகளால் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமிந்த விஜேசிறியின் இராஜினாமா செய்துள்ளமையால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப போவது இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒருவர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துக்களை வெளியிட்டார்.
”பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியவில்லை, பாதையில் நடக்க முடியவில்லை. அதனால் விரக்தியில் இராஜினாமா செய்தேன் என சமிந்த விஜேசிறி பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.
அனைத்து எம்.பி.க்களையும் சிறுமைப்படுத்தி ஊடகங்கள் அதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன. ஆனால், நாங்களும் பாதையில்தான் பயனிக்கிறோம். அவ்வாறு எவ்வித பிரச்சனையும் இல்லை.
ஆனால் இவரின் பதவி விலகலுக்குப் பின்னர் இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒருவர் அடுத்ததாக பாராளுமன்றத்துக்கு வர உள்ளார். 90 மில்லியனை பெற்றுக்கொண்டுதான் எம்.பி பதவியை அவர் இராஜினாமா செய்ததாக நாளிதழில் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இந்த செய்தி எமக்கு நல்லதல்ல. ஆகவே இதுகுறித்து ஆராயுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்டுவந்த சமிந்த விஜேசிறி நேற்று தமது எம்.பி பதவியை இராஜினாமா செய்வதாக பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.