2016 இல் காணாமல் போன இந்திய விமானப்படை விமானம்: சிதைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு

0
73
Article Top Ad

வங்காள விரிகுடாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு காணாமல் போன இந்திய விமானப்படையின் ஏஎன்-32 விமானத்தின் சிதைந்த பாகங்கள் சென்னை கடற்கரையில் இருந்து 310 கிலோமீட்டர் தொலைவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமானம் காணாமல் போன போது அதில் 29 பணியாளர்கள் இருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அரசாங்கத்தின் தகவல்களின்படி, சென்னை கடற்கரையிலிருந்து சுமார் 310 கிமீ தொலைவில் கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விமானத்தின் சிதைவு படங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவை 2016 இல் காணாமல் போன ஏஎன்-32 விமானத்துடன் ஒத்துப் போவதாக கண்டறியப்பட்டது.

குறித்த விமானமானது 2016 ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து காலை 8 மணியளவில் புறப்பட்டு, போர்ட் பிளேரில்‍ உள்ள இந்திய கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்தது.

எனினும் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், வங்காள விரிகுடாவில் இருந்தபோது அனைத்து தொடர்புகளையும் இழந்து காணாமல் போனதுடன், விமானத்தை தேடும் பணிகளும் தோல்வியில் முடிவடைந்தது.

இறுதியாக 2016 செப்டெம்பர் 15 அன்று, இந்திய விமானப்படை ஒரு செய்தியை வெளியிட்டது.

அதில், ஏஎன்-32 விமானத்தில் இருந்த 29 பேரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதிய விமானப்படை, காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க தவறிவிட்டதாகவும், அதில் இருந்தவர்கள் இறந்து விட்டதாகவும் அறிவித்தது.