பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள புனேர் பொதுத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், பாகிஸ்தானின் முதல் இந்துப் பெண் வேட்பாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் டாக்டர் சவீரா பிரகாஷ்.
புனேர் மாவட்டத்தில் பஷ்தூன் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். பிரிவினைக்கு முன் இது சுவாத் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது. புனேர் மாவட்டம் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
2009ஆம் ஆண்டில், அருகிலுள்ள சுவாத் பள்ளத்தாக்கைக் கைப்பற்றிய தெஹ்ரிக்-இ-தலிபான், இஸ்லாமியச் சட்டத்தை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் புனேர் மாவட்டத்தை கைப்பற்ற முயன்றது. முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து மலைகளைக் கைப்பற்றினர். பின்னர் ராணுவ நடவடிக்கை மூலம் அவர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டனர்.
‘முன்னர் புனேர் மாவட்டம் ஆபரேஷன் பிளாக் தண்டர்ஸ்டார்ம் (Operation Black Thunderstorm) மூலம் மட்டுமே அறியப்பட்டது. இப்போது அது மற்ற காரணங்களுக்காகவும், குறிப்பாக நேர்மறையான காரணங்களுக்காக செய்திகளில் பேசப்படுகிறது.’
‘பொதுத் தொகுதியில் வேட்பாளராக நான் களமிறங்குவது அத்தகைய செய்திகளில் ஒன்றாகும். என்னாலேயே எனது நகரம் செய்திகளில் இடம்பிடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.’ என்று கூறுகிறார் டாக்டர் சவீரா பிரகாஷ். இதைச் சொல்லும்போதே அவரது முகத்தில் உற்சாகம் தெரிகிறது.
தெஹ்ரீக்-இ-தலிபானிடமிருந்து சுவாத் புனேர், நிச்டா திர் மற்றும் ஷங்லா மாவட்டங்களை விடுவிக்க பாகிஸ்தானின் ராணுவம் விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து ஒரு கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டன. அதன் பெயர் தான் ஆபரேஷன் பிளாக் தண்டர்ஸ்டார்ம்.