அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா தருணங்கள்

0
63
Article Top Ad

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா திங்கள்கிழமை (ஜனவரி 22) வெகு விமரிசையாக நடந்தது. 51 அங்குல உயர குழந்தை ராமர் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்வு நாடெங்கும் நேரலை மூலம் ஒளிபரப்பப்பட்டது. நேரடியாகக் காண திரைப் பிரபலங்கள், விளையாட்டு நட்சந்திரங்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், சாதுக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

சிறப்பு முகூர்த்தத்தில் பிரதிஷ்டை: சரியாக பகல் 12:29:03 மணியில் இருந்து 12.30:35 மணிக்குள் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இது தனிச்சிறப்பான முகூர்த்த நேரம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக, கருவறையில் ராமர் சிலை முன்னால் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அமர்ந்திருந்தனர்.

கோயில் அர்ச்சகர்களின் வழிகாட்டுதலின் கீழ் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஆகியார் பூஜைகளை செய்தனர். கோயில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை முழங்கினர். மேலும், பல்வேறு அர்ச்சனைகளை செய்தனர். குழந்தை ராமருக்கு மலர்கள், பழங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதனையடுத்து, பகவான் ராமருக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி ராமருக்கு ஆரத்தி காண்பித்தார். பின்னர், ராமர் சிலையின் கண்களில் கட்டப்பட்டிருந்த மஞ்சள் துணி அகற்றப்பட்டு திறப்பு விழா நடந்தேறியது. ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டபோது ராணுவ ஹெலிகாப்டர்கள் பூமழை தூவின. குழந்தை ராமர் வண்ண வண்ண மலர்கள் மட்டுமல்லாது தங்கம், வைரம், பவள ஆபரணங்களால் அழகு மிளிர அருள்பாலித்தார். கையில் தங்க வில்லும், அம்பும் கம்பீரத் தோற்றம் அளித்தது. குழந்தை ராமர் சிலையின் பாதங்களில் தாமரை மலரை பிரதமர் மோடி வைத்து வணங்கினார்.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத் உள்ளிட்டோர் குழந்தை ராமரை தரிசித்து நீண்ட நேரம் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

ராமர் கோயில் திறப்பு விழா நிறைவடைந்ததும் பிரதமர் மோடி தனது 11 நாட்கள் கடும் விரதத்தை நிறைவு செய்தார். அவருக்கு கோவிந்த் கிரி மஹாராஜ், பூஜைக்கு படைத்த பாலை ஊட்டிவிட்டு விரதத்தை நிறைவு செய்யவைத்தார்.

குவிந்த பிரபலங்கள்: முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடா, உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத், துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா, ஆர்எஸ்எஸ் சர்சங்கசாலக் மோகன் பாகவத், ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுனில் அம்பேத்கர், டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சதீஷ் ரெட்டி, முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம், பாபா யோகி ராம்தேவ் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அணில் அம்பானி, சுனில் பாரதி மிட்டல், நடிகர்கள் அமிதாப் பச்சன், அமிதாப் பச்சன், கங்கனா ரனாவத், ரஜினிகாந்த், விவேக் ஓபராய், தனுஷ், ஹேமமாலினி, மாதுரி தீக்ஷித், ரன்பீர் கபூர், ஆலியா பட், சிரஞ்சீவி, ராம் சரண், அனுபம் கெர், இந்தி கவிஞர் குமார் விஸ்வாஸ், பாடகர் சோனு நிகாம், முன்னாள் இன்னாள் விளையாட்டு வீரர்களான சச்சின் டெண்டுல்கர், மிதாலி ராஜ், சாய்னா நேவால், அணில் கும்ப்ளே உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

சாதுக்கள் ஆசிர்வாதம்: ராமர் கோயில் திறப்பு விழாவுக்குப் பின்னர் பிரதமர் மோடி சாதுக்களில் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். அவருக்கு சாதுக்கள் ஒருசேர நின்று ஆசிகள் வழங்கினர். ராமர் கோயில் திறப்பு பற்றி நெகிழ்ச்சி பொங்க பேசிய பிரதமர் மோடி, “ஒட்டுமொத்த இந்தியாவும் இன்று தீபாவளியை கொண்டாடுகிறது; ராமர் புகழ் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர்ந்துள்ளது; இந்தியாவுக்கு இன்று புதிய சகாப்தம் தொடங்கி உள்ளது” எனப் பெருமிதம் பொங்க தெரிவித்தார். விரிவாக வாசிக்க “நம்மை பகவான் ராமர் நிச்சயமாக மன்னிப்பார்” – அயோத்தி கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு

“இந்த நாளுக்காகவே இந்தியா பல ஆண்டுகளாக காத்திருந்தது. இது அற்புதமான, மறக்க முடியாத தருணம்” என்று அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார். | விரிவாக வாசிக்க > “இந்த நாளுக்காகவே இந்தியா பல்லாண்டு காத்திருந்தது” – ராமர் கோயில் திறப்பு விழாவில் யோகி ஆதித்யநாத் பேச்சு

“இன்று குழந்தை ராமர் மட்டும் திரும்பிவரவில்லை. இந்தியாவின் பெருமையும் மீண்டு வந்திருக்கிறது” என்று ராமர் கோயில் திறப்பு விழாவில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறினார். அதன் விவரம்: “பிரதமர் மோடி ஒரு தபஸ்வி” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் @ ராமர் கோயில் திறப்பு விழா

“இது ஒரு அற்புதமான அனுபவம். முழு இந்திய மக்களுக்காக உருவாக்கப்பட்ட நாள் இது” என்று நடிகர் சிரஞ்சீவி தெரித்தார். இதேபோல், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்ற திரைப் பிரபலங்கள் சிலர் தங்களது கருத்துகளை உணர்வுபூர்வமாக பகிர்ந்தனர். அதன் விவரம்: “கண்ணீர் வழிந்தது…” – அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர்கள் நெகிழ்ச்சி

ஆண்டுதோறும் அயோத்தி வரப் போவதாக ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்ற பின் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதேபோல் மேலும் சில பிரபலங்களும் உணர்வுபூர்வமாக அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். வாசிக்க > அயோத்தி அனுபவம் எப்படி? – பிரபலங்கள் பகிர்வு

ராமர் கோயில் திறப்பு விழாவுக்குப் பிறகு, கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் மீது பூக்களைத் தூவி பிரதமர் மோடி வாழ்த்தும் பாராட்டுகளையும் பகிர்ந்தார்.

அயோத்தி ராமர் கோயிலில் இனி அன்றாடம் காலை 7 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை மாலை 6.30, இரவு 7.30 மணிக்கு ஆரத்தி நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.