அரசாங்கத்தின் உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளது.
”அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவையாக உள்ளன.
உத்தேச சட்டத்தை நிறைவேற்ற பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும்.” என ஐக்கிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளது.
தனி மனித, கருத்துச் சுதந்திரங்கள் பறிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான குழுவினர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதுடன், இந்த மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.
உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் சரத்துகள் நியாயமான காரணமின்றி எந்தவொரு நபரையும் கைது செய்து காவலில் வைக்க இராணுவம், பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருக்கு அதிகாரம் அளிப்பதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் மூலம் அரசியல் சாசனம் அளித்துள்ள தனி மனித சுதந்திரம், கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மீறப்படுவதால் இந்த சட்டத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளுமன்றத்தில் பெறப்பட வேண்டும் எனவும் மனுதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க, சோசலிச இளைஞர் சங்கம் மற்றும் பலர் மனு தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கடந்த பாராளுமன்ற அமர்வில் இரண்டாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.