2022ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பாரிய மக்கள் போராட்டமொன்று வெடித்தது. இதில் அப்போதைய கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.
மக்களின் கடுமையான எதிர்பால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அப்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்த ராஜபக்சர்கள் அனைவரும் அமைச்சுப் பதவியை துறக்க நேரிட்டது.
அதற்கு முன்னதாக இரட்டை குடியுரிமைக் குற்றச்சாட்டில் பசில் ராஜபக்ச தமது அமைச்சுப் பதவியை துறந்திருந்தார். இந்நிலையில், ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றது முதல் பொதுஜன பெரமுன ஆளுங்கட்சியாக உள்ள போதிலும் ராஜபக்சர்கள் எவருக்கும் அமைச்சுப் பொறுப்புகளை ஜனாதிபதி வழங்கியிருக்கவில்லை.
பொதுஜன பெரமுனவின் சார்பில் பலமுறை நாமல் ராஜபக்ச, சமால் ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு அமைச்சுப் பொறுப்பை வழங்கு ரகசிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.
பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட தலைவர்களுக்கு அமைச்சுப் பதவியை வழங்க ஜனாதிபதி மறுப்பதாகவும் சில குற்றச்சாட்டுகளை அக்கட்சியினர் வெளிப்படையாக சுமத்தியிருந்தனர்.
இந்நிலையில், சசீந்திர ராஜபக்சவுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த வகித்த இராஜாங்க அமைச்சுப் பதவியே இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னர் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை பெற்ற முதல் ராஜபக்சராக இவர் இருக்கிறார். அதற்கு மேலதிகமாக தற்போது மீண்டும் ஒரு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சுப் பதவியை வழங்குவதற்கான கோரிக்கைகள் ஜனாதிபதியிடம் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளது. அதுகுறித்தும் விரைவில் ஆலோசனைகளை அரசாங்கம் நடத்தக்கூடுமெனவும் தெரியவருகிறது.