”முன் அறிவிப்புகள் ஏதுமின்றி செயல்பட்டமைக்கு கடும் எதிர்ப்பை வெளியிடுகிறோம்.” என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கவலை வெளியிட்டனர்.
அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். இதனால், தேர்தலுக்கான பணிகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது.
தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்கள் மற்றும் பரந்தப்பட்ட கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைகளையும் குதிரை பேரத்தையும் ஆரம்பித்துள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச போட்டியிடுவதை அக்கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
மறுபுறம் ஜே.வி.பி எனப்படும் மக்கள் மத்தியில் ஆதரவு வலுப்பெற்றுள்ளதாக கருதப்படும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க போட்டியிட உள்ளார்.
ஆளுங்கட்சிக்குள் ஜனாதிபதிக்கு ஆதரவு
இப்பின்னணியில், ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனவில் மாத்திரம் இன்னமும் ஜனாதிபதி வேட்பாளர் யாரென உறுதியான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நியமிக்க வேண்டுமென பொதுஜன பெரமுனவின் சில முக்கிய தலைவர்கள் வலியுறுத்தி வரும் பின்புலத்தில் ஒருசிலர் அதற்கு எதிர்ப்பையும் வெளியிடுகின்றனர்.
இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுஜன பெரமுனவுக்கும் ரணிலுக்கும் இடையில் தீர்மானமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றது.
திடீரென ரணில் முடிவை மாற்றியதால் பதற்றம்
இருந்தாலும், கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் ரணிலுக்கும் பொதுஜன பெரமுனவினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.
இந்தக் கூட்டம் முதலில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறு என பொதுஜன பெரமுனவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் ஜனாதிபதி செயலகத்துக்கு மாற்றப்பட்டதாலேயே இந்த வாக்குவாதம் ஏற்பட்டது.
அத்துடன், கூட்டத்தில் முதலில் பொதுஜன பெரமுனவினர் மாத்திரமே கலந்துகொள்வார்கள் என தெரியப்படுத்தப்பட்டிருந்த போதிலும், பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லான்சா தலைமையிலான கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் மற்றும் ஏனைய சில உறுப்பினர்களும் கலந்துகொண்டமையால் பதற்றம் ஏற்பட்டது.
வேட்பாளராக விரும்புகிறேன்
பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பொதுஜன பெரமுனவின் பொது வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென்ற சிபாரிசுகள் முன்மொழியப்பட்டன.
இருந்தாலும், ரணிலை வேட்பாளராகத் தெரிவுசெய்வதற்கு முன்னர் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட வேண்டுமென அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கூட்டத்தின் ஆரம்பத்தில், ஜனாதிபதி ரணில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தமது விருப்பம் பற்றி வெளிப்படுத்தியதன் பிரகாரம் இவ்வாறு பொதுஜன பெரமுனவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஏனைய கட்சிப் பிரதிநிதிகள் சந்திப்பில் உள்வாங்கப்பட்டமை குறித்து விரக்தியை வெளிப்படுத்திய பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், ஜனாதிபதித் தேர்தல் விடயங்கள் குறித்து திடீரென கலந்துரையாடுவதற்கு தமது கட்சி தயாராக இல்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.
எந்தவொரு தேர்தல் கலந்துரையாடலுக்கும் முன்னர் குறிப்பிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தீவிரமாக செயல்படும் அநுர, சஜித்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, நேரமின்மை காரணமாக தனியான கூட்டங்களை நடத்த முடியுமா? எனக் கேள்வியெழுப்பியதுடன், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் தேசிய மக்கள் சக்தி போன்ற எதிர்க்கட்சிகளின் தீவிர ஈடுபாட்டை அவர் மேற்கோள் காட்டினார்.
இதற்கு பதிலளித்த சாகர காரியவசம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏனைய கட்சிகளில் இருந்து வேறுபட்டு செயற்படுவதாகவும், ஜனாதிபதியுடன் தனியான சந்திப்பை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிப்பது குறித்து பொதுஜன பெரமுன இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
ஆனால், பொதுஜன பெரமுனவின் சார்பில் கலந்துகொண்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், முக்கிய அமைச்சர்களும் ரணிலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதனால் கட்சிக்குள் இரண்டை நிலைப்பாடு காணப்படுவதாகவும் தெரியவருகிறது.