சாந்தனை அழைத்துவர வெளிவிவகார அமைச்சுக்கு ஜனாதிபதி பரிந்துரை

0
53
Article Top Ad

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார்.

அதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று முற்பகல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சாந்தனை இலங்கைக்கு அழைத்துவரும் தேவையினை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி விரைவாக அதற்கான பணிகளை முன்னெடுப்பதற்கான உத்தரவுகளை பிறப்பிப்பதாக உறுதியளித்துள்ளார்.

அத்துடன், வெளிவிவகார அமைச்சரிடம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளையும் நடத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

சாந்தனை இலங்கைக்கு அழைத்துவர அனுமதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், மனோ கணேசன் ஆகியோர் அண்மையில் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கையை சாதகமாக பரிசீலித்து, சாந்தன் இலங்கை வந்து தன் வயதான தாயாரைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரட்னாயக்கவுக்கு இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.

என்றாலும், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் விரைவுப்படுத்தப்படவில்லை. இவ்வாறான பின்புலத்திலேயே இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

சுதந்திர ராஜா என்ற இயற்பெயர் கொண்ட சாந்தன், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

எனினும், இவர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால், அவருடைய சொந்த நாட்டில் இருந்து ஒப்புதல் கிடைத்த பின் அனுப்புவதற்கான நடைமுறைகள் செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சாந்தனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சாந்தனுக்கு இரண்டு கால்களிலும் வீக்கம் ஏற்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.