இலங்கை தீவு அதன் இராஜதந்திர உறவுகளை பல்வேறு வகையில் புதுப்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைகளுக்கு அமைய தென்கிழக்கு ஆசியா நாடுகள், மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடனான இராஜதந்திர உறவுகள் விரிவுபடுத்தப்படுகின்றன.
திசைதிரும்பும் இராஜதந்திர உறவுகள்
தென்கிழக்கு ஆசியாவின் வளர்ந்துவரும் பொருளாதாரங்களாக உள்ள சிங்கப்பூர், வியட்னாம், தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளுடன் வர்த்தக மற்றும் கலாசார உறவுகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு முக்கிய கட்டம்தான் கடந்த 3ஆம் திகதி தாய்லாந்துடன், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இலங்கைத் தீவு கைச்சாத்திட்டிருந்தது.
ஆபிரிக்காவில் புதிய அத்தியாயம்
இந்நிலையில், ஆபிரிக்க நாடுகளுடான புதிய உறவுப்பாலத்தை ஏற்படுத்த இலங்கைத் தீவு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ராஜபக்சர்கள் மற்றும் ரணிலின் நெருங்கிய விசுவாசி என கருதப்படும் உண்டாவுக்கான இலங்கை தூதுவர் வேலுப்பிள்ளை கணநாதன் இந்தப் பணியை முன்னெடுத்து வருகிறார்.
சீனா மற்றும் சிங்கப்பூருடன் மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களை மேலும் இலகுப்படுத்தும் முயற்சியில் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
ரணிலின் சீன மற்றும் சிங்கப்பூர் விஜயங்களில் இந்த விடயங்கள் குறித்து ஆழமான அவதானங்களும் செலுத்தட்டிருந்தன.
ஐரோப்பிய நாடுகளுடனான உறவில் ரணில் நாட்டம் கொண்டவராக இருக்கின்ற போதிலும், இம்முறை இலங்கையின் பொருளாதார சூழல்கள் மற்றும் உள்நாட்டு அரசியல் சூழ்நிலைகள் அவருக்கு கைகொடுக்கவில்லை.
கூண்டில் சிக்குண்டுள்ள ரணில்
ஜனாதிபதித் தேர்தலொன்றை இந்த ஆண்டு இலங்கைத் தீவு எதிர்கொள்ள உள்ளது. இதில் ஆளுங்கட்சியின் பிரதான வேட்பாளராக ரணில் களமிறங்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
பௌத்த சித்தாந்தங்களை பிரதானமாக முன்னிலைப்படுத்தும் தரப்பாக ராஜபக்ச தரப்பு உள்ளது. அவர்களது பிரதானமான வாக்கு வங்கியும் கடும் போக்கு பௌத்த வாதத்தை முன்னிலைப்படுத்தியதாக உள்ளது.
இந்த கூண்டில் சிக்குண்டுள்ள ரணிலும் தேர்தலை வெற்றிக்கொள்ளும் நோக்கில் ஜனநாயகத்துக்கு விரோதமான பல தீர்மானங்களுக்கு ஆதரவளித்து வருகிறார்.
அதன் வெளிப்பாடுதான் நிகழ்நிலை காப்புச் சட்டம் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டமை மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகள்.
2013ஆம் ஆண்டு உண்டாவுக்கான தூதுவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் கணநாதன் நியமிக்கப்பட்டது முதல் ஆப்பிரிக்க நாடுகளுடன் இவர் வலுவான உறவை பேணி வருகிறார்.
கென்யா, உண்டா, தென்னாபிரிக்கா, ருவண்டா உட்பட பல நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தி வருகிறார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய உண்டா விஜயத்தின் போது முக்கியத்துவம் வாய்ந்த பல சந்திப்புகளையும் இவர் ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.
விரைவில் ஆபிரிக்க நாடுகளுடன் புதிய பொருளாதார ஒப்பந்தங்களை கைச்சாத்திடும் முயற்சிகளையும் இலங்கை தீவு மேற்கொண்டுள்ளதுடன், ஆபிரிக்காவில் இருந்து புதிய முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவரும் மற்றும் இலங்கையின் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் பணியும் கணநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது.