பெர்த் நகரில் ஜெய்சங்கரை சந்தித்த ரணில்: சமகால நிலவரங்களை கேட்டறிந்தார்

0
45
Article Top Ad

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 7ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

இருநாட்டு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அதனை தொடர்ந்து வலுப்படுத்த இதன்போது இருவரும் அவதானம் செலுத்தினர்.

இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி பெர்த் நருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

“இந்தியப் பெருங்கடலில் நிலைத்தன்மையை நோக்கிச் செல்வது” என்ற கருப்பொருளில் இடம்பெறும் இந்த மாநாட்டில் 40 நாடுகள் பங்கேற்றுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்பானது பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்திக்கான இலங்கையின் முயற்சி மற்றும் அதன் நிலைப்பாட்டை நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவொன்றும் பெர்த் நகருக்குச் சென்றுள்ளது.

“எங்கள் நீல எதிர்காலம் : இந்தியப் பெருங்கடல் பகுதி எவ்வாறு அதன் உறுப்பு நாடுகள் இணைந்து பகிரப்பட்ட கடல் வளங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும்” என்ற தலைப்பில் ஜனாதிபதி பிரதான உரையையும் மாநாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை நிகழ்த்தியிருந்தார்.

ஜெய்சங்கருடனான சந்திப்பில் இருநாட்டு பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.

எட்கா உடன்படிக்கை மற்றும் இலங்கையில் இந்தியா முன்னெடுத்துவரும் அபிவிருத்தி திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் ஜெய்சங்கர் ஜனாதிபதியிடம் கேட்டறிந்துள்ளார்.