சீனாவை சீண்டும் மைத்திரி

0
46
Article Top Ad

இலங்கைத் தீவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு புதிய ஜனாதிபதி பதவியேற்க வேண்டும்.

ஆனால், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளை எடுப்பதற்கு பதிலாக நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்க வேண்டுமென்ற தீப்பொறியை அரசாங்கம் பற்ற வைத்துள்ளது.

ஆளுங்கட்சிக்கும் ஜனாதிபதி ரணிலுக்கும் தேர்தலொன்றை எதிர்கொண்டு வெற்றிபெற முடியாத புறச்சூழல் காணப்படுவதால் நாட்டில் குழப்பகரமான சூழ்நிலையை தோற்றுவிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

இந்தப் பின்புலத்தில் ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானமிக்க ஒரு சக்தியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கும் முயற்சிகளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன ஈடுபட்டுள்ளார்.

சீனாவின் அழுத்தம் அதிகரித்துவிட்டது

அவரது அமெரிக்க பயணமும் வாசிங்டென் டைம்ஸுக்கு வழங்கியுள்ள நேர்காணலும் சீனாவை அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது.

‘‘இலங்கை மிகவும் ஸ்திரமற்ற நிலையில் காணப்படுகின்ற ஒரு தருணத்தில் வெளிசக்திகள் அழுத்தங்களை கொடுக்கின்றன. சீனாவின் அழுத்தம் குறிப்பிடத்தக்களவில் உள்ளது. இலங்கை குறித்து அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும்.‘‘ என மைத்திரிபால வாசிங்டென் டைம்ஸுக்கு கூறியுள்ளார்.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை வீழ்த்த சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே மைத்திரி எடுத்திருந்தார்.

என்றாலும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மைத்திரியின் செல்வாக்கு கடுமையாக சரிந்தது. ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பலமான கூட்டணியில் இணைவதற்கான நிபந்தனைகளை முன்வைப்பதற்கு கூட மக்கள் பலம் இல்லாத ஒருநபராக மைத்திரி இருப்பதாக கருதப்படும் சந்தர்ப்பத்திலேயே அவர் அமெரிக்கா மற்றும் இந்திய இராஜதந்திரிகளை சந்திக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து புதுடில்லிக்குச் செல்ல திட்டம்

இந்த பயணம் இலங்கைத் தீவில் மீண்டும் தம்மை ஓரளவு செல்வாக்கு மிக்க நபராக உயர்த்தும் என மைத்திரி எண்ணுவதுடன், அதன் ஊடாக ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்கான பேரம் பேசும் சக்தியை வலுப்படுத்திக்கொள்ள முடியும் அவர் எனவும் கணித்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

2022இல் இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு உதவியளித்த அமெரிக்காவுக்கு மைத்திரிபால சிறிசேன தமது நன்றிகளையும் இந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து நேரடியாக அவர் புதுடில்லிக்கு செல்ல உள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளை மைத்திரிபால சந்திக்க உள்ளதாகவும் தெரிய வருகிறது.