ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் காலமானார்.
சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், சற்றுமுன்னர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதேவேளை சாந்தன் இலங்கையை சேர்ந்தவர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டார்.
மேலும் தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி வந்தார் சாந்தன். இன்னிலையில் சாந்தனை இலங்கை அனுப்பி வைக்க மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.