ஐ.நாவின் தீர்மானத்தை நிராகரித்த இலங்கை: ஒருசிலரின் அபிலாஷைகளை நிறைவேற்ற கூடாதெனவும் கோரிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட 46/1 மற்றும் 51/1 தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது அமர்வு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மாலி அருணதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் உரையாற்றிய அவர்,
ஐக்கிய நாடுகள் சபை கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்நோக்கி வரும் வேளையில் தெளிவற்ற நோக்கத்துடன் இவ்வாறான பயனற்ற பொறிமுறையை நிறுவுவது சபையின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணானது.
ஒரு சிலரின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் உரிய பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிலிருந்து இலங்கை மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அண்மைக்காலமாக இலங்கை அரசாங்கம் எதிர்கொண்ட சவால்கள் வெற்றிகொள்ளப்பட்டுள்ளதாகவும் நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளை மீட்டெடுப்பதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.
‘‘கடுமையான தடைகள் இருந்தபோதிலும், தேசிய ஒருமைப்பாடு, மோதலுக்குப் பிந்தைய நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் அடித்தளங்களை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை விரைவுபடுத்துவதில் எங்கள் இலக்குகள் உறுதியாகவும் அசையாமலும் உள்ளன.
உண்மை, நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சட்டமூலம் ஜனவரி 1, 2024 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. இதற்காக பொதுமக்களின் கருத்துக்கு போதுமான அவகாசம் அளிக்கப்பட்டது.
அதன் பின்னரே அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.‘‘ எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை பெறப்பட்ட 6,025 முறைப்பாடுகளில் 5,221 முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டுள்ளன.
பதினாறு பேர் உயிருடன் இருப்பதும், மேலும் மூன்று பேர் இறந்த நிலையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிரந்தரப் பிரதிநிதி தெரிவித்தார்.
1,313 குடும்பங்களுக்கு காணாம்போனோர் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் செல்லுபடியாகும் காலத்தை 2028 வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு 41.2 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் இழப்பீட்டு அலுவலகம் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் வலியுறுத்தினார்.