புவி வெப்பமடைதல்,சூழல் மாசடைதல் மற்றும் காட்டுத்தீ ஆகியன வட மற்றும் தென் துருவப் பனிப்பாறைகளை வேகமாக உருக்கி வருகின்றன.
பனி உருகுவதால்,சேரும் புதிய நீரால் கடல் மட்டம் பெருமளவில் உயர்ந்து கரையோரப் பகுதிகள் மூழ்கும் நிலைமையேற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 24 கடலோர நகரங்கள் கடல் மட்டம் உயர்வதால் கடல் நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொள்ளும் என ஆய்வு அறிக்கைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதற்குள் தீர்வு காணவில்லை என்றால், கணிக்க முடியாத அளவிற்கு கடல் மட்டம் உயருவதை தடுக்க முடியாது. அமெரிக்காவில் 32 கடலோர நகரங்களில் 24 நகரங்களில் கடல் மட்டம் ஆண்டுக்கு 2 மில்லிமீட்டர் வரை அதிகரித்து வருகிறது.
இருப்பினும், இவற்றில் 12 நகரங்களில், சர்வதேச கடல் மட்ட உயர்வின் சராசரி விகிதத்தை விட அதிகரித்து வருகிறது.
இது தவிர, இந்த நகரங்களில் 50 பேரில் ஒருவர் கடுமையான வெள்ளத்தை எதிர்கொள்வார் என கூறப்படுகிறது.
இந்த ஆராய்ச்சியின் விரிவான விபரங்கள் ‘நேச்சர்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளன. புவி வெப்பமடைதல் காரணமாக காலநிலையில் எதிர்பாராத எதிர்மறை மாற்றங்கள் ஏற்படுகின்றன.
வெப்பநிலை அதிகரிப்பு, அடிக்கடி ஏற்படும் வெப்பம், வறட்சி மற்றும் காட்டுத்தீ ஆகியவற்றால் பூமியின் சராசரி வெப்பநிலை அதிகரித்து வருகிறது.
இதன் விளைவாக, வட மற்றும் தென் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் முன்பை விட வேகமாக உருகி வருகின்றன.
அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் கடலோரப் பகுதிகளில் கடல் மட்டம் உயரும் அபாயம் அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
2050 க்குள் அமெரிக்க கடற்கரையோரங்களின் கடல் மட்டம் 0.30 மீட்டர் வரை உயரும். இதனால் குடியிருப்புகளுக்குள் கடல் நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்.
மண் மற்றும் வீதிகள் கடல் நீரில் அடித்துச் செல்லப்படும் என்பதால், ஒட்டுமொத்த பொது போக்குவரத்து அமைப்பும் சேதமடையும். புள்ளிவிபரங்களின்படி சில பகுதிகள் தொய்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அடுத்த 30 ஆண்டுகளில் 35 தனியார் சொத்துகளில் ஒன்று வெள்ளத்தால் சேதமடையக்கூடும்.
முந்தைய மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட அழிவு விரைவில் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடல் மட்டம் உயரும் போது லட்சக்கணக்கான கரையோர மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். அமெரிக்காவில் $109 பில்லியன் சொத்து சேதம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க கடற்கரையோரத்தில் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளின் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. கரையோரங்களில் கடல் மட்டம் உயர்ந்தால், பேரழிவுகளும், விளைவுகளும் மோசமாக இருக்கும் என இந்த ஆய்வில் பங்கேற்ற விஞ்ஞானி ரொபர்ட் நிக்கோலஸ் தெரிவித்துள்ளார்.
பொஸ்டன், நியூயோர்க் நகரம், ஜெர்சி சிட்டி, அட்லாண்டிக் சிட்டி, வேர்ஜீனியா பீச், வில்மிங்டன், மிர்டில் பீச், சார்லஸ்டன், சவன்னா, ஜோக்சன்வில்லி, மியாமி, நேபிள்ஸ், மொபில், பிலோக்சி, நியூ ஆர்லியன்ஸ், ஸ்லைடெல், லேக் சார்லஸ் ஆகிய 32 நகரங்கள் கடல் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன .
மேலும் போர்ட் ஆர்தர், டெக்சாஸ் சிட்டி. கோல்வெஸ்டன், ஃப்ரீபோர்ட், கார்பஸ் கிறிஸ்டி, ரிச்மண்ட், ஓக்லாண்ட், சென் பிரான்சிஸ்கோ, தெற்கு சென் பிரான்சிஸ்கோ, ஃபாஸ்டர் சிட்டி, சாண்டா குரூஸ், லோங் பீச், ஹண்டிங்டன் பீச், நியூபோர்ட் பீச், சான்டியாகோ ஆகிய கரையோரங்களும் கடல் நீரில் மூழ்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.