அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவிற்கு தனது முதல் பயணத்தை சனிக்கிழமை (09) மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) யானை மற்றும் ஜீப்பில் சவாரி செய்துள்ளார்.
1957ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னத்தை பார்வையிடும் முதல் பிரதமர் இவர்தான் என்று அசாம் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மோடி முதலில் யானை சவாரியை மேற்கொண்டார், அதைத் தொடர்ந்து தேசிய பூங்காவின் மத்திய கோஹோரா எல்லைக்குள் அமைந்துள்ள மிஹிமுக் பகுதிக்குள் ஜீப் சஃபாரி செய்தார்.
இந்த சவாரியின் போது, மோடியுடன் பூங்கா பணிப்பாளர் சோனாலி கோஷ் மற்றும் சிரேஷ்ட வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த பயணம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள மோடி,
காசிரங்கா தேசிய பூங்காவிற்குச் சென்று, அதன் நிலப்பரப்புகளின் இணையற்ற அழகையும், அசாம் மக்களின் அரவணைப்பையும் அனுபவிக்குமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஒவ்வொரு வருகையும் ஆன்மாவை செழுமைப்படுத்தும் மற்றும் அசாமின் இதயத்துடன் உங்களை ஆழமாக இணைக்கும் இடம் – என்று குறிப்பிட்டார்.
தேசிய பூங்காவில் லக்கிமாய், பிரத்யும்னா மற்றும் பூல்மாய் என பெயரிடப்பட்ட மூன்று யானைகளுக்கும் பிரதமர் உணவளித்தார்.
பெண் வனக் காவலர்களுடன் மோடி சந்திப்பு
இதனிடையே, பெண் வனக் காவலர்கள் குழுவான ‘Van Durga’ சேர்ந்த பலர் மோடியுடன் உரையாடினர்.
பாதுகாப்பு முயற்சிகளில் முன்னணியில் இருக்கும் பெண் வனக் காவலர்களின் குழுவான வான் துர்காவுடன் இணைந்து, நமது காடுகளையும் வனவிலங்குகளையும் துணிச்சலாகப் பாதுகாக்கிறது.
நமது இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பும் தைரியமும் உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது – என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் இரண்டு நாள் அசாம் பயணம்
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அசாமுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அவர் 18,000 கோடி இந்திய ரூபா மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.
இத்திட்டங்களை அசாம் மற்றும் மத்திய அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
வெள்ளிக்கிழமை (08) அவர் முதலில் தேஜ்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கினார், அங்கு அவரை முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வரவேற்றார்.
தேஜ்பூரில் இருந்து ஹெலிகொப்டர் மூலம் காசிரங்கா அமைந்துள்ள கோலாகாட் மாவட்டத்திற்கு சென்ற மோடி, யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னத்தில் இரவு தங்கினார்.
பயணத்தின் இன்றைய திட்டங்கள்
அஹோம் ஜெனரலின் “படையெடுப்பாளர்களுக்கு எதிரான துணிச்சலான எதிர்ப்பை” கொண்டாடும் வகையில் ஜோர்ஹாட்டில் உள்ள லச்சித் பர்புகானின் 125 அடி உயர ‘வீரத்தின் சிலை’யை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.
பின்னர் அவர் ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள மெலெங் மெட்டெலி போத்தாருக்குச் செல்கிறார், அங்கு அவர் சுமார் 18,000 கோடி மதிப்பிலான மத்திய மற்றும் மாநில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.
இது தவிர, அதே இடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி இன்று உரையாற்றவுள்ளார்.