ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கொள்கை ரீதியிலான பிரச்சினை உள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும், ஸ்தாபகரான பஸில் ராஜபக்ஷவும் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஸில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தியதாகவே இந்தச் சந்திப்பு நடைபெற்றது. ஜனாதிபதி பணியாட்தொகுதி பிரதானி சாகல ரத்நாயக்கவும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றார்.
“அதிகாரப் பகிர்வு மற்றும் அரச சொத்துக்களைத் தனியார் மயப்படுத்தல் போன்ற செயற்பாடுகளால் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க முடியாத கொள்கை ரீதியிலான பிரச்சினை உள்ளது.” – என்று இதன்போது ராஜபக்ஷக்கள் இருவரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொலிஸ் அதிகாரத்தைத் தவிர ஏனைய அதிகாரங்களைப் பகிர்வது பிரச்சினை அல்ல என்றும், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது கட்டாயம் என்றும் இதற்கு ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாமை தொடர்பிலும் ராஜபக்ஷ தரப்பில் இருந்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை, ரணிலை ஆதரிக்கும் முடிவை கட்சி உறுப்பினர்கள் எடுக்கும் பட்சத்தில் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் வெற்றிக்காக உழைத்தது போல் ரணிலின் வெற்றிக்காக உழைப்பதற்குத் தான் தயார் என இதன்போது பஸில் கூறியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
மேற்படி சந்திப்பில் இறுதி இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை. எனினும், மீண்டும் இரு தரப்பினரும் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
அடுத்து நடைபெறவுள்ள இரண்டாவது சந்திப்பின்போது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் மொட்டுக் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் பற்றி ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தப்படவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சி ரணிலை ஆதரிக்குமா அல்லது வேட்பாளர் ஒருவரை நிறுத்துமா என்பதும் அந்தக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படவுள்ளது