உலகளாவிய கப்பல் போக்குவரத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ; சூயஸ் கால்வாயை அடுத்து பனாமா கால்வாயில் ஏற்பட்டுள்ள நெருக்கடி

0
69
Article Top Ad

இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையிலான போர் காரணமாக செங்கடல் வழியான போக்குவரத்து பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளது.

இதனால் பல கப்பல் நிறுவனங்கள் தென்னாபிரிக்கா ஊடாகவே தமது கப்பல் பயணத்தை தொடர்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் போர்ட்வாட்ச் (PortWatch platform) தளத்தின் தரவுகளின்படி, முக்கியமான கப்பல் பாதைகள் மூலமான வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது உலக விநியோகச் சங்கிலிகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து 10 நாட்களுக்கும் மேலாக அதிகரித்துள்ளது

செங்கடல் பகுதியில் கப்பல்கள் மீதான தாக்குதல்களால் ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் முக்கியமான கடல்வழிப் பாதையான சூயஸ் கால்வாய் வழியின் ஊடாக கப்பல் போக்குவரத்து பாதித்துள்ளது.

உலகளாவிய கடல் வர்த்தகத்தில் 15 விகிதம் பொதுவாக இந்தப் பாதை வழியாக நடைபெறுகிறது. இடையூறுகள் காரணமாக பல கப்பல் நிறுவனங்களை ஆப்பிரிக்காவை (Cape of Good Hope) சுற்றி தங்கள் கப்பல்களைத் திசைதிருப்ப கட்டாயப்படுத்தியுள்ளன.

இதன் விளைவாக விநியோக நேரம் சராசரியாக 10 நாட்களுக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கடுமையான வறட்சி காரணமாக பனாமா கால்வாய் ஊடான கப்பல் போக்குவரத்தும் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.

இடையூறுகள் மற்றும் பணவீக்கத்துக்கு வழிவகுத்துள்ளது

இதனால் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் பனாமா கால்வாய் ஊடாக கப்பல் போக்குவரத்துக்கு அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

உலகளாவிய கடல் வர்த்தகத்தில் சுமார் 5 வீதத்திற்கு அதிகமான பரிமாற்றம் பனாமா கால்வாய் ஊடாகவே நடைபெறுகிறது.

காலநிலை மாற்றம் உலகளாவிய வர்த்தக வழிகளில் தடங்கல்களை மேலும் அதிகரித்துள்ளது. இது உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பெரும் இடையூறுகள் மற்றும் பணவீக்கத்துக்கு வழிவகுத்துள்ளது.

சூயஸ் கால்வாய் வழியாக பரிமாற்றப்படும் வர்த்தகத்தின் அளவு, ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 50 விகிதம் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. அதேநேரம் ஆப்பிரிக்காவை சுற்றியுள்ள வர்த்தகம் கடந்த ஆண்டை விட 74 விகிதம் உயர்ந்துள்ளது.

என்றாலும், பனாமா கால்வாய் வழியான வர்த்தக அளவு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 32 வீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது உலகளாவிய வர்த்தகம் எதிர்கொள்ளும் சவால்களை வெளிப்படுத்துவதாக PortWatch platform தெரிவித்துள்ளது.