பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையிலான உயர்மட்ட குழு சீனாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளதுடன், அந்நாட்டு ஜனாதிபதி ஷி ஜின் பிங் மற்றும் பிரதமர் லி கியாங் ஆகியோருடன் சந்திப்புகளை நடத்தியதுடன், இருநாட்டு சமூக, அரசியல், பொருளாதாரம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தியது.
நேற்றுமுன்தினம் பெய்ஜிங்கில் பிரதமர் லி கியாங் உடனான சந்திப்பின் பின் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் 9 ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.
சீனாவின் கடற்படை செயல்பாடுகள் அதிகரிக்கலாம்
இந்த நிலையில் கொழும்பு சர்வதேச விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு பெய்ஜிங் உதவிகளை வழங்க உறுதியளித்துள்ளததாக பிரதமர் தினேஸ் குணவர்தன கூறியுள்ளார்.
ஜப்பானின் நிதியுதவியுடன் கொழும்பு விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் இலங்கை அதன் இறையாண்மைக் கடனைத் திருப்பிச் செலுத்தாததால் இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இவ்வாறான பின்புலத்திலேயே கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை சீனா அபிவிருத்தி செய்ய உள்ளதாக பிரதமர் தினேஸ் அறிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதன் ஊடாக இந்து-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் கடற்படை செயல்பாடுகள் அதிகரிக்கலாம் என்று இந்தியாவும் அமெரிக்காவும் ஏற்கனவே கவலை கொண்டுள்ளன.
இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது
இந்தப் பின்புலத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் மேலும் செயல்பாடுகளை விரிவுபடுத்த சீனாவுக்கு இலங்கை வழங்கியுள்ள ஆதரவு மற்றும் கொழும்பு விமான நிலையத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளதாக NDTV தெரிவித்துள்ளது.
இலங்கை தனது துறைமுகங்கள் இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட மாட்டாது என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
ஆனால், உளவு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் ஹம்பாந்தோட்டைக்கு வருவதை புதுடில்லி கடுமையாக எதிர்த்தது.
இந்த பின்புலத்தில்தான் பிரதமரின் பயணத்தில் சீனாவுடன் எட்டப்பட்டுள்ள உடன்பாடுகளும் இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுடில்லிக்கு நேற்று புதன்கிழமை சென்றுள்ள ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்கவிடம் இந்தியா கேள்வியெழுப்பும் என இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது..
ஒரேநேரத்தில் புதுடில்லியையும் கொழும்பையும் சமரசப்படுத்தும் சூழ்நிலையை கொழும்பு எதிர்கொண்டுள்ளதால் சாகலவும் இந்த விடயம் தொடர்பில் புதுடில்லிக்கு தெளிவுப்படுத்துவார் என இராஜதந்திரிகள் தெரிவிக்கின்றனர்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் 2017 ஆம் ஆண்டு 99 வருட குத்தகைக்கு 1.12 பில்லியன் டொலர்களுக்கு சீனாவுக்கு இலங்கையால் ஒப்படைக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.